Sunday, April 14, 2013

அபிராமி அந்தாதி - அறிவில் நிறைந்த அமுதம்


அபிராமி அந்தாதி - அறிவில் நிறைந்த அமுதம்




ஆகாய விமானத்தில் போய் இருக்கிறீர்களா ? போகும் போது வெளியே பார்த்து இருக்கிறீர்களா ? பஞ்சு பஞ்சாய் மேகம் மிதக்கும். அதன் மேல் சூரிய ஒளி பட்டு வர்ண கலவையாக மாறிக் கொண்டே இருக்கும்....ஒரு புறம் மிதந்து செல்லும் மேகம், மறு புறம் இடம் மாறிக் கொண்டே இருக்கும் சூரியன்...கண் முன்னே இனிய காட்சி மாறிக் கொண்டே இருக்கும்.விமானத்தில் இருந்து ஒரு எட்டு வெளியே போய் அந்த மேகங்களின் மேல் நடக்க ஆசையாய் இருக்கும், அதை தொட்டு பார்க்க ஆசையாய் இருக்கும்....

பறவைகள் சிறகடித்து பறக்கும் வானம், மழை மேகம் வட்டமிடும் வானம், மின்னல் கோலம் போடும் வானம்...

சூரியன், நிலவு, கோள்கள், நட்சத்திரங்கள், பரந்து விரிந்த இந்த பால் வெளி (milky way) ....விரிந்து கொண்டே போகும் இந்த வானம் ஒரு அற்புத காட்சி...

அபிராமியின் அழகுக்கு பறந்து விரிந்து அந்த வானம் கூட ஒரு எல்லை இல்லை. எல்லை இல்லாத இந்த பரந்த வெளி கூட அவளின் அழகுக்கு இணை இல்லை.

"வான் அந்த மான வடிவு உடையாள் " (அந்தம் முடிவு, எல்லை. வேதாந்தம் - வேதத்தின் முடிவு )

புலன்களுக்கு இன்பம் சேர்பவை அறிவுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது.  அறிவுக்கு இன்பம் சேர்ப்பவை புலன்களுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது. இரண்டும் சேர்ந்து கிடைப்பது அபூர்வம்.

அபிராமி "ஆனந்தமாய் அறிவாய் " இருக்கிறாள். மனதுக்கும் அறிவுக்கும் சுகம், இனிமை சேர்ப்பவள்.

அமுதம் உடலையும் உயிரையும் இணைப்பது. அதனால் தான் நாம் உண்ணும் உணவுக்கு அமுது என்று பெயர்.

அபிராமி "அமுதமாய்" இருக்கிறாள்.


எந்த புத்தகத்தை படித்தாலும், இறுதியில் அது என்ன சொல்ல வருகிறது என்று அறிய வேண்டும். ஏதோ நோக்கத்திற்காகத் தான் புத்தகங்கள் எழுதப் படுகின்றன.

நான்கு வேதங்களும் இறுதியில் சொல்லும் அர்த்தம் அபிராமி. "மறை நான்கினுக்கும் தான் அந்தமான வடிவு உடையாள்".  நான்கு வேதங்களுக்கும் அவளே முடிவு.

அப்படி பட்ட அபிராமியின் பாதம், சரணார விந்தம், இருக்கும் இடம் எது தெரியுமா ?

சுடுகாடு சாம்பல் பூத்து இருக்கும். அதற்கு தவள நிறம் என்று பெயர். அந்த காட்டை நடன அரங்கமாய் கொண்டு  நடனம் இடுபவன் சிவன். அந்த சிவனின் தலையில் அவளின் பாதம் இருக்கிறது.

அன்பின் உச்சம்...மனைவி தாயாகத், தெய்வமாகத் தெரியும் அன்பின் உச்சம்.

அன்பின் உச்சம்...கணவன் குழந்தையாகத் தெரியும் பரிவு.

அன்பின் உச்சம் ... நெற்றியில் மட்டும் அல்ல, பாதத்திலும் முத்தமிட தோன்றும்....


பாகு கனி மொழி மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்பார் அருணகிரி நாதர். எனக்காக இந்த காடு மேடு எல்லாம் அலைந்தாயா என்று அவளின் குற வள்ளியின் பாதங்களை வருடி விட்டாராம் முருகன் 


நாள் எல்லாம் ஓடி ஆடி களைத்து போன மனைவியின் பாதம் பிடித்துப் பாருங்கள்...அன்பின் இன்னொரு பரிணாமம் தெரியும்....


பாடல் 



ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.


பொருள்






ஆனந்தமாய் = நான் உணரும் அத்தனை ஆனந்தமும் அவள் தான்

என் அறிவாய் = நான் படித்தது, அறிந்தது, உணர்ந்தது எல்லாம் அவள் தான்

நிறைந்த அமுதமுமாய் = உடலும், உயிரும், மனமும் நிறைந்த அமுதம் அவள்

வான் அந்தமான வடிவு உடையாள் = வானத்தின் எல்லையும் தாண்டியது அவளின் வடிவு


மறை நான்கினுக்கும் = நான்கு வேதங்களுக்கும்

தான் அந்தமான = தானே முடிவான

சரணாரவிந்தம் = சரணம் அடையும் பாதங்கள். விந்தம் என்றால் மூலப் பொருள்.  நாத விந்து கலாதி நமோ நாம என்பது அருணகிரி வாக்கு.


தவள நிறக் = சாம்பல் நிறக்

கானம் = காடு (சுடு காடு )

தம் ஆடரங்கு = தான் ஆடும் அரங்கமாக

ஆம் = ஆகும்

எம்பிரான் = எம்மை விட்டு என்றும் பிரியாதவன் (எம்பிரான்)

முடிக் கண்ணியதே = கண்ணுதல் என்றால் சூடுதல். அவன் தலையில் சூடுவது அவளின் பாதங்கள்


1 comment:

  1. இந்தப் பாடலை நான் முன்பே படித்திருந்தாலும், இந்த விளக்கம் அருமையாக எனக்குப் பொருளை உணர்த்தியது. நன்றி.

    ReplyDelete