Wednesday, April 17, 2013

திருக்குறள் - பெண் எனும் கூற்று


திருக்குறள் - பெண் எனும் கூற்று 


கூற்றுவன் என்றால் எமன். கூறு போடுபவன் கூற்றுவன். உயிரையும் உடலையும் கூறு போடுபவன் என்பதால் அவன் கூற்றுவன். இருப்பவர்களிடம் இருந்து (உயிர்) இல்லாதவர்களை பிரிப்பதால் அவன் கூற்றுவன். 

கூற்றுவன் தன்னோடு நம் உயிரை கொண்டு சென்று விடுவான். யாராவது எமனை பார்த்து இருக்கிறார்களா ? 

இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை காதலித்தவர்கள் எல்லோரும் எமனை பார்த்து இருக்கிறார்கள். 

அவள் போகும் போது அவன் உயிரை கையோடு கொண்டு சென்று விடுகிறாள். உயிரை கொண்டு செல்பவந்தானே கூற்றுவன். அப்படி என்றால் அவளும் எமன் தானே. 

பெண்ணுக்கு ஆயிரம் குணங்கள்  உண்டு. காலம் காலமாக நாம் பெண்களுக்கு வஞ்சனை செய்து வருகிறோம் ...அவர்களுக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கே குணங்கள்தான் உண்டென்று சொல்லி.

அவளின் அன்பு, காதல், கோபம், செல்ல சிணுங்கல், தன்னவன் மற்றவளை பார்கிறானோ என்ற சந்தேகம், பரிவு, தயை, கருணை, தியாகம் என்று ஆயிரம் குணங்கள் அவளுக்கு 

குணங்களின் குன்று அவள்...

அழியாத குணக் குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. என்று உருகுவார் அபிராமி பட்டர். 


பாடல் 

பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் 
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

சீர் பிரித்த பின் 

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் 
பெண் தகையால் பேரமர் கட்டு 

பொருள் 

பண்டு = முன்பு. அவளைப் பார்பதற்கு முன்பு 

அறியேன் = அறியவில்லை 

கூற்று என்பதனை = கூற்று என்ற எமனை. கூற்றுவன் என்று சொல்லிவிட்டால் அது ஆண் பாலாகிவிடும். இவளோ பெண். எனவே "கூற்று" என்று சொல்லி நிறுத்தி விட்டார்.

இனி அறிந்தேன் = இப்போ தெரியுது அது யாருன்னு 
 
பெண் தகையால் = பெண் தன்மையால். தகை என்றால் அழகு செய்தல், அன்புடன் இருத்தல். 

பேரமர் கட்டு  = பெரிய அழகிய கண்களை கொண்டது என்று. அமர் என்றால் போர் களம். அவள் மட்டும் அல்ல தன் படைகளான கண், போன்ற மற்ற அவயங்கள், அவளின் வெட்கம் போன்ற குணங்கள் என்னும் படை பலத்தோடு போர் களத்திற்கு வந்திருக்கிறாள் 

வெல்வது மட்டும் அல்ல, இந்த போர் களத்தில் இருந்து உயிரையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவாள்.... 

1 comment:

  1. படிப்படியாகக் ஒன்றின் மேல் ஒன்று கட்டிக்கொண்டே போகிறாரே!

    ReplyDelete