Tuesday, April 30, 2013

இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


அறம் , பொருள், இன்பம், வீடு என்ற நான்கை சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.

அற வழியில் பொருள் ஈட்டி, அதன் மூலம் இன்பம் துய்த்து, பின் அதை கடந்து வீடு பேற்றை அடைய வேண்டும் என்பது பொருள்.

இந்த நான்கில் இன்பம், அதாவது காமமும் காதலும் மிக சக்தி வாய்ந்தது.

வலுவானது. காமத்தை வெல்லுவது கடினம்.

அது மனிதனின் இயற்கையோடு ஒன்றியது. அதை அடக்க நினைப்பதும் சிறந்தது அல்ல. அடக்க அடக்க மேலும் பொங்கி வருவது காமம்.

காமத்தை வெல்ல அமுதனார் எளிய வழி சொல்லுகிறார்.

காமம் அப்படியே இருக்கட்டும். அதை அப்படியே கண்ணன் மேல் திருப்பி விடுங்கள். அவ்வளவுதான்.

ஆயர் பாடி கோபிகைகள் அத்தனை பேரும் கண்ணன் மேல் மோகம் கொண்டார்கள் என்று கூறுவது ஒரு  உவமை - ஒரு உருவகம்.

உள் அர்த்தம், உலக மக்களே உங்கள் காமத்தை, இறைவன்பால் திருப்புங்கள் என்பதே.

அப்படி திருப்பும் போது துன்பம் செய்யும் காமம் சீரிய நல்  காமமாக மாறி விடுகிறது. அந்த காமமே நன்மை செய்யும்.

அறம் , பொருள், இன்பம் இந்த மூன்றும் கண்ணன் மேல் காமம் கொள்வதற்குத் தான் என்று கூறினார் இராமனுசர்.

பாடல்

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே


பொருள் 



சேமநல் வீடும் =க்ஷேமத்தை தரக் கூடிய வீடு பேறும்

பொருளும் = பொருளும் (செல்வமும்)

தருமமும் = அறமும்

சீரியநற் காமமும்= சிறந்த நல்ல காமமும்


என்றிவை நான்கென்பர் = என்று இந்த நான்கைப் பற்றி கூறுவார்கள் (அறம் , பொருள், இன்பம், வீடு பேறு )

நான்கினும் = இந்த நான்கிலும்


கண்ணனுக்கே = கண்ணனுக்கே

ஆமது காமம் = ஆவது காமம். 

அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான் = அறம் , பொருள், இன்பம் இந்த மூன்றும் இதற்கே என்று உரைத்தான்

வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே = வாமணனை போல் சிறப்பு கொண்ட இராமானுசன், இந்த மண்ணில்.

காமம் விளையும்.

தவிர்க்க முடியாது.

அந்த காமம் நம்மை தவறான வழியில் இட்டுச் செல்லாமல், நல் வழியில் இட்டுச் செல்ல அந்த காமத்தை கண்ணனுக்கே அர்ப்பணம் பண்ணி விடுங்கள் என்றார் இராமானுசன்





1 comment:

  1. சரிதான் ... வேறே மாதிரி மாத்தி யோசிச்சிருக்காரு! ஆனா, நமக்கு இதெல்லாம் ஆகாது!

    ReplyDelete