Friday, May 17, 2013

தேவாரம் - எனக்கு பிடித்தாமனது எல்லாம் நீ


தேவாரம் - எனக்கு பிடித்தாமனது எல்லாம் நீ 


உங்களுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் ?

உங்கள் பெற்றோர், பிள்ளைகள், துணைவன்/துணைவி, நல்ல இசை, அருமையான புத்தகங்கள், சுவையான உணவு, புது புது உடை, இயற்க்கை, செல்வம் என்று இப்படி உங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்....

நாவுக்கரசர் பார்க்கிறார்....இறைவா, எனக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதுவாக எல்லாம் நீ இருக்கிறாய்....எதுவெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருமோ , எதுவெல்லாம் எனக்கு சுகம் தருமோ, அது எல்லாமாக நீ இருக்கிறாய்....

பார்க்கும் இடத்தில் எல்லாம் உன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி பாடியது போல்....

உண்ணும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் நீ என்று ஆழ்வார்கள் உருகியது போல்

நாவுக்கரசர் உருகுகிறார்....

பாடல்



நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
    நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
    மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
    பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
    ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.


பொருள்






நின்னாவார் = நின் + ஆவார் = உன்னை போல் ஆவார்

 பிறரின்றி நீயே யானாய் = உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் கூறியது போல

நினைப்பார்கள் = சிந்திப்பவர்கள்

மனத்துக்கோர் = அவர்கள் மனதிற்கு


வித்து மானாய் = மூலமானாய். எல்லா சிந்தனைகளுக்கும் அவனே ஆதாரம்

மன்னனாய் = எல்லாவற்றிற்கும் அரசனாய்


 மன்னவர்க்கோ ரமுத மானாய் = மன்னவர்களுக்கு ஒரு அமுதமும் ஆனாய்

மறைநான்கு மானாய் = நான்கு வேதன்களுமானாய்

ஆ றங்க மானாய் = ஆறு அங்கங்களும் ஆனாய் (அவை எவை ?)

பொன்னானாய் = பொன் ஆனாய்

மணியானாய் = மணி ஆனாய்

போக மானாய் = இந்த செல்வங்களை அனுபவிக்கும் அனுபவமும் நீயே ஆனாய்

பூமிமேல் = இந்த பூமியில்

புகழ்தக்க பொருளே = புகழத் தக்க ஒன்று உண்டு என்றால், அது நீதான்

உன்னை = உன்னை

என்னானாய் என்னானாய் = என்ன ஆனாய், என்ன ஆனாய் என்று

 என்னி னல்லால் = எண்ணி வியப்பதை தவிர

ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே = இந்த ஏழை என்ன சொல்லி புகழ்வேன்



2 comments:

  1. பக்திப் பரவசம் ததும்பும் பாடல். நன்றி.

    ReplyDelete
  2. சிக்ஷ (எழுத்திலக்கணம்) , வியாகரணம் (சொல்லிலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்), ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பவை.

    ReplyDelete