Monday, May 6, 2013

தேவாரம் - இடரினும் தளரினும்


தேவாரம் - இடரினும் தளரினும் 


நல்லது நடக்கும் போது பொதுவாக யாரும் இறைவனை நினைப்பது இல்லை. கஷ்டம் வந்தால் இறைவனை திட்டி தீர்ப்பார்கள் - இந்த ஆண்டவனுக்கு கண்ணு இல்லை, நான் எவ்வளவு பூஜை செய்தேன், எவ்வளவு காணிக்கை போட்டேன், இது சாமியே இல்லை, இந்த கடவுளை கும்பிடுவதில் ஒரு புண்ணியமும் இல்லை என்று இறை நம்பிக்கை குறைவதை காண்கிறோம்.

சுந்தரர்.

இறைவனிடம் ரொம்ப நடப்பு உணர்வோடு பழகியவர்.

எதையும் இறைவனிடம் உரிமையோடு கேட்பார், ஏதோ கொடுத்து வைத்தது மாதிரி.

ஒரு தந்தையிடம் மகன் எப்படி உரிமையோடு கேட்பானோ, அப்படி கேட்பார். தரவில்லை என்றால் சண்டை பிடிப்பார்.

அப்படி ஒரு அன்யோன்யம். உன்னிடம் எனக்கு இல்லாத உரிமை யாருக்கு என்று.

பாடல்



இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள்





இடரினும் = இடர் வரினும், துன்பம் வரினும்

தளரினும் = தளரும் மூப்பு வரினும்


எனதுறுநோய் = எனக்கு உற்ற நோய்

தொடரினும் = விடாமல் தொடர்ந்தாலும்

உனகழல் = உனது திருவடிகளை

 தொழுதெழுவேன் = தொழுது எழுவேன்

கடல்தனில் = பாற்கடலில்

 அமுதொடு = அமுதத்தோடு

 கலந்தநஞ்சை = கலந்துவிட்ட நஞ்சை

மிடறினில் = கழுத்தில்

 அடக்கிய வேதியனே  = அடக்கிய வேதியனே


இதுவோ = இதுவா

எமை ஆளுமா = எம்மை ஆட்கொள்ளும் அழகு

 றீவதொன்றெமக் கில்லையேல் = எமக்கு தருவதற்கு ஒன்று உன்னிடம் இல்லை என்றால் 

அதுவோ = அதுவோ

வுன தின்னருள் = உனது இன்னருள்

 ஆவடுதுறை அரனே. = திருவாவடுதுறை சிவனே

உன்னிடம் எல்லாம் இருக்கிறது. தருவதற்கு மனம் இல்லை....இதுவா நீ எனக்கு அருள் தரும் அழகு என்று இறைவனை ஒரு பிடி பிடிக்கிறார். நீ எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உன்னை விடுவதாக இல்லை என்று ஒரு மிரட்டல் வேறு.....




3 comments:


  1. சுந்தரர் பாடியது அல்ல இப்பதிகம்.

    இது திருஞானசம்பந்தர், சிவனிடம் தம் தந்தைக்காக செல்வம் வேண்டி வரம் பெற்ற பதிகம் இது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இது திருஞானசம்பந்தர் பாடிய பாடல்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete