Saturday, May 25, 2013

வாலி வதம் - கால் தரை தோய நின்று


வாலி வதம் - கால் தரை தோய நின்று 


சில விஷயங்களை சொல்லி புரிய வைக்க முடியாது. நேரடியாக ஒவ்வொருவரும் உணர முடியும்.

தெரியாமல் விரலை சுட்டுக் கொண்டால், ஹா என்று உதறுகிறோம். அந்த சூடு எப்படி இருந்தது என்று சொல் என்றால் எப்படி சொல்லுவது ?

லட்டை வாயில் போட்டால் இனிக்கிறது. இனிப்பை உணரலாம். சொல்லிக் காட்ட முடியாது.

கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் சொல்லுவார்

செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே

என்ன, படிச்சு நாக்கு சுளுக்கிக் கொண்டதா ?....:)

சந்தக் கவி அரசு அருனைகிரியின் பாடல் என்றால் சும்மாவா. பதம் பிரிப்போம்.

செவ் வான் உருவில் திகழ் வேலவன் அன்று 
ஒவ்வாதது என உணர்வித்ததுதான் 
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் 
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 

முருகனை கண்டார் அருணகிரி. அந்த அனுபவம் என்ன என்று சொல்ல முடியவில்லை. அதற்கு இணையான (ஒப்புமை ) ஒன்று இல்லை.

உணர்ந்தார், ஆனால் உரைக்க முடியவில்லை.

நீங்களும் அவ்வாறே அறிந்து கொள்ளுங்கள். வேறு எப்படி சொல்லுவது (இசைவிப்பது ?) என்கிறார்.

இறை அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.

அருணகிரி கோபுரத்தின் மேல் இருந்து குதித்து விட்டார். முருகன் அவரை கையில் ஏந்தி ஆட்கொண்டார்.

மாணிக்க வாசகருக்கு குரு வடிவில் வந்து திருபெருந்துறையில் காட்சி தந்தார். பின் திருக்கழுகுன்றிலே "கணக்கிலா வடிவம் நீ காட்டி வந்து என்ன ஆண்டு கொண்டாய் கழுக் குன்றிலே" என்றார்

அப்பருக்கு உலகம் எல்லாம் அம்மை அப்பனாக தெரிந்தது. கண்டேன் அவர் திரு பாதம், கண்டரியாதன கண்டேன் என்று உருகினார்.

இங்கே வாலி, இறைவனை காண்கிறான். உயிர் போகும் சமயம் உண்மை தெரிகிறது. மரண வாக்கு மூலம் என்று சொல்லுவார்களே அது சத்ய வாக்கு. அவன் பொய் சொல்ல   வேண்டிய அவசியம் இல்லை.

கோவம் கொண்டவன், மாறி இறை உணர்வு பெறுகிறான்.

அவன் உள்ளத்தில் நன்றி உணர்வு பொங்குகிறது.

தனக்கு மேல் ஒரு பொருள் இல்லாத அந்த மெய் பொருள், கையில் வில் ஏந்தி,
கால் தரை தோய நின்று, கண்ணின் பாரவைக்கு தெரியும்படி வந்தது. மயக்கம் தரும் இந்த பிறவி பிணிக்கு மருந்து அது, அதை நீ வணங்கு என்று தன்  மகன் அங்கதனிடம் சொல்கிறான்

பாடல்


'பாலமை தவிர் நீ; என்
      சொல் பற்றுதிஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
     மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று,
      கட்புலக்கு உற்றது அம்மா!
''மால் தரும் பிறவி நோய்க்கு
      மருந்து'' என, வணங்கு, மைந்த!


பொருள்






பாலமை தவிர் நீ = சிறுபிள்ளைதனத்தை விடு (சின்ன பிள்ளை மாதிரி அழுது கொண்டு இருக்காதே, சின்ன பிள்ளை மாதிரி இராமன் செய்தது சரியா தவறா என்று ஆராய்ந்து கொண்டு இருக்காதே என்றும் கொள்ளலாம்). அவன் அங்கதனுக்கு சொல்லவில்லை, நமக்கு சொல்கிறான்.


என் சொல் பற்றுதிஆயின் = நான் சொல்லுவதை கேட்பாய் என்றால்.

வாலிக்குத் தெரியும், வரும் காலம் எல்லாம் மக்கள் இதை பற்றி வாதம் பண்ணிக் கொண்டு, என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்று. எனவே சொல்கிறான், "நான் சொல்லுவதை நீ கேட்பாய் என்றால்" என்று சொல்லுகிறான்

தன்னின் மேல் ஒரு பொருளும் இல்லா = தனக்கு மேல் ஒரு பொருளும் இல்லாத

மெய்ப்பொருள் = உண்மையான பொருள்.

வில்லும் தாங்கி = வில்லும் தாங்கி

கால் தரை தோய நின்று = கால் தரை தோய நின்று. அவன் இறைவன். கால் தரையில் படாதவன். நமக்காக காயல் தரையோடு தோய நின்று.

கட்புலக்கு உற்றது அம்மா = கண்ணில் தெரியும்படி நின்றது.

மால் தரும் பிறவி நோய்க்கு = மயக்கம் தரும் பிறவி நோய்க்கு.

மருந்து'' என, வணங்கு = மருந்து என்று நினைத்து வணங்கு. பிறவி நோய்க்கு வேறு எங்கும் மருந்து கிடையாது. அவன் ஒருவன்தான் அல்லல் பிறவி அறுப்பவன்.

மைந்த = மைந்தனே.

மேலிருந்து கீழே வருவது மிக மிக கடினம். எவ்வளவு அன்பு இருந்தால், அந்த இறை, கால் தரை தோய, வில் ஏந்தி வர முடியும்.

இராமன் தவறு செய்தான் என்று நினைத்தால் அதை யார் சொல்ல வேண்டும் ?

பாதிக்கப் பட்ட வாலி சொல்ல வேண்டும் - ஆனால் அவனோ இராமனை தெய்வம் என்று கொண்டாடுகிறான்

அவன் மனைவி சொல்லலாம் - தாரை புலம்பலில் ஒரு வார்த்தை கூட இராமனை குற்றம் சொல்லவில்லை.

அவன் மகன் அங்கதன் சொல்லலாம் - வாலியே சொல்கிறான், என் மகன் உனக்கு அடைக்கலம் என்று. இராமன் தனக்கு தவறு இழைத்து இருந்தால், தன்  மகனை அவனுக்கு அடைக்கலமாக தருவானா ?

அவன் தம்பி சுக்ரீவன் சொல்லவில்லை

சொல்லின் செல்வன் அனுமன் சொல்லவில்லை.

பாதிக்கப்படவர்களோ, பாதிகப்படவர்களின் நெருங்கிய உறவினர்களோ , சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களோ , அதை பார்த்தவர்களோ அங்கு தவறு நடந்ததாகச் சொல்ல வில்லை.

பின்னால் வந்த நாம் அதை பற்றி சர்ச்சை செய்து கொண்டிருக்கிறோம்....

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நமது சர்ச்சை இராமாயணத்தில் இப்படி நடந்ததா என்பது அல்ல. இப்படி நடந்ததாக வைத்துக் கொண்டு அதைப் பற்றி யோசித்தால் நாம் என்ன நலம் பெற முடியும் என்பதே முக்கியம். என் அபிப்பிராயத்தில், "இராமன் கடவுள்; அவன் செய்தது எதுவும் தவறாக இருந்திருக்க முடியாது" என்று சொல்லி முடித்துவிட்டால், வாலி வதத்தை பரிசீலனை செய்யாவிட்டால், அதைப் படிப்பதில் ஒரு பயனும் இல்லை. எனவே, இராமன் இறை என்று கொள்ளாமல், அவன் செய்ததைப் பற்றி எண்ணுவது நல்லது.

    ReplyDelete