Monday, May 27, 2013

திருக்குறள் - இன்சொல் கூறல்


திருக்குறள் - இன்சொல் கூறல் 


மனதிற்கு உவகையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய சொற்களை கூறுவது. விருந்தோம்பலில், இனிய சொற்கள் கூறுவது இன்றியமையாதது. எனவே, இன்சொல் கூறல் என்ற இந்த அதிகாரத்தை விருந்தோம்பல் என்ற அதிகாரத்திற்கு அடுத்து வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இன் சொல் என்றால் என்ன ? சிரிக்க சிரிக்க பேசுவதா ? ஜோக் அடித்துக்கொண்டே இருப்பதா ? ஒருவரை புகழ்வதா ?

இன் சொல் என்பதற்கு மூன்று முக்கிய விதிகளை கூறுகிறார் வள்ளுவர்:

முதலாவது - அது அன்பு கலந்து இருக்க வேண்டும். வள்ளுவர் ஈரமான சொற்கள் என்கிறார். அன்பு, கருணை, வாஞ்சை இப்படி அத்தனையும் சேர்த்துக் கொள்ளலாம். கேட்பவர்கள் மனம் குளிர வேண்டும். அது ஈரமான சொற்கள்.

இரண்டாவது, உண்மையாக இருக்கவேண்டும். மனம் குளிர வேண்டும் என்பதற்காக இல்லாதையும் பொல்லாததையும் எடுத்து விடக் கூடாது. உண்மை அறிந்து பேச வேண்டும்.

மூன்றாவது, செம்மையான பொருள்களை பேச வேண்டும். செம்மையான பொருள்கள் என்றால் என்ன என்று பரிமேலழகரை கேட்டால் அறம் என்பார். அதுக்காக எப்ப பார்த்தாலும் அறம் பற்றியே பேசிக் கொண்டு இருக்க முடியுமா ? சிறப்பானவை, நன்மை பயப்பவை, உபயோகமானவை என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த மூன்றும் இணைந்தது இனிய சொல்.

இதைத்தான் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

பாடல்


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


பொருள்






இன்சொலால் = இன் சொல் + ஆல் . இனிமையான சொல் என்பது. "ஆல் " என்பது அசைச்சொல். இருப்பதே ஏழு வார்த்தை, அதிலும் ஒரு அசைச் சொல். இந்த வள்ளுவர், சரியான வார்த்தை கஞ்சன்.

 ஈரம் அளைஇப் = ஈரம் விரவி

 படிறுஇலவாம்  = படிறு என்றால் வஞ்சம், சூது, பொய், போன்றவை. அது இல்லாமல்

செம்பொருள் = செம்மையான பொருள்.

கண்டார்வாய்ச் சொல் = அதை கண்டவர்களின் வாயிலிருந்து வரும் சொல், இனிய சொல்

அடுத்த முறை மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ (அல்லது வேறு யாரோடு) பேசினாலும் இந்த மூன்றும் இருக்கிறதா என்று  பாருங்கள்.

ஏன் இனியவற்றை பேச வேண்டும் ? பேசினால் என்ன பலன் ? இனிமையாக பேசாவிட்டால் என்ன ஆகி விடும் ?

அதையும் பார்ப்போம்....
 


1 comment:

  1. அப்படியானால் நீ குலாப் ஜாமுன் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும்!

    அருமையான திருக்குறள். (அப்படிச் சொல்ல எனக்கு என்ன அருகதை?!)

    ReplyDelete