Thursday, May 30, 2013

இராமாயணம் - மனைவியின் மகத்துவம்

இராமாயணம் - மனைவியின் மகத்துவம் 


தசரதன் அரசை இராமனிடம் தருவது என்று முடிவு செய்துவிட்டான். அதற்கு பல காரணங்களை சொல்கிறான். அது பற்றி பின்னால் பார்ப்போம்.

முடிவு செய்தவுடன், தன் மந்திரிகளிடம் ஆலோசனை கேட்கிறான்.

இராமன் அரசை ஏற்று நடத்த தகுதியானவன் என்று சொல்ல வந்த வசிட்டர் முதலியோர் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார்கள்.

இராமனின் மனைவி நல்லவள் , எனவே இந்த அரசை அவனிடம் கொடுக்கலாம் என்கிறார்கள்.

ஒரு பெரிய பதவியை எடுத்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்றால்  ஒருவனின் மனைவி சிறந்தவளாக இருக்க வேண்டும்.

கணவனின் வெற்றி மனைவியின் கையில் இருக்கிறது.

எவ்வளவு பெரிய விஷயம் ?

இராமன் நல்லவந்தான் என்பதை பின்னால் சொல்லி அவன் மனைவி நல்லவள் என்பதை முதலில் சொல்கிறார்கள்.

பாடல்

மண்ணினும் நல்லள்; மலர்மகள், கலைமகள், கலையூர்
பெண்ணினும் நல்லள்; பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன்; கற்றவர், கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார்.

பொருள்





மண்ணினும் நல்லள் = மண்ணை விட பொறுமையானவள். அகழ்வாரை தாங்கும் நிலம் போல, பொறுமையானவள். அது உண்மை என்று பின்னால் பல இடங்களில் நிரூபிக்கிறாள். தன்னை கொடுமை செய்த அரக்கர்களை கூட அவள் வெறுக்க வில்லை. அகழ்வாரை தாங்கும் நிலம் போல் அவர்களையும் மன்னித்தாள். ஜானகியின் முதல் சிறப்பாக கம்பன் காட்டுவது அவளின் பொறுமையை.

மலர்மகள் = திருமகள்

கலைமகள் = கலைமகள், சரஸ்வதி

கலையூர் பெண்ணினும் நல்லள் = கலைகளில் துர்கையை விடவும் நல்லவள்

பெரும்புகழ்ச் சனகியோ நல்லள் = பெரிய புகழை பெற்ற ஜானகியோ நல்லவள்

கண்ணினும் நல்லன் = இராமன் கண்ணைவிட நல்லவன்

கற்றவர், கற்றிலா தவரும் = படித்தவர்களும் படிக்காதவர்களும்

உண்ணும் நீரினும் = பருகும் நீரை விட

உயிரினும் = உயிரை விட

அவனையே உவப்பார் = மக்கள் அவனை பெரிதும் விரும்புவார்கள்.

அவர்களின் கண்ணைவிட, பருகும் நீரை விட, அவர்களின் உயிரை விட இராமனை மக்கள் விரும்புவார்கள்

எனவே, அவனுக்கு அரசை தரலாம்.

வாழ்கையை இனிமையாக கொண்டு செல்ல இராமாயணம் எப்படி வழி காட்டுகிறது.

மனைவி எவ்வளவு முக்கியமானவள் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு.

அவளுடைய பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்று கம்பன் எடுத்து காட்டுகிறான்.


1 comment:

  1. அதனால்தான் நான் அவ்வளவு பெரிய ஆளாக வரவில்லை! (இது எப்படி இருக்கு?)

    ReplyDelete