Wednesday, May 22, 2013

வாலி வதம் - தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?

வாலி வதம் - தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?


இராமாயணம் என்றால் இராமனின் வழி என்று பார்த்தோம்.

நாம் வாழ்வில் தவறே செய்ய மாட்டோமா ? தவறு நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது ? அதற்க்கு என்ன பிரயாசித்தம் செய்வது ?

இராமன் வாழ்வில் இதற்க்கு முன் உதாரணம் ஏதாவது இருக்கிறதா ? இராமன் காட்டிய வழி என்ன ?

வாலி வதை தவறு என்றே வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

இராமன் என்ன செய்தான் ?

முதலில், யாருக்கு தவறு இழைக்கப் பட்டதோ அவர்கள் முன் போய் நின்றான். ஓடி ஒளியவில்லை .

பாடல்


'இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின்,
முறை திறம்பினனால்' என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, 


பொருள்






இறை திறம்பினனால்  என்னே = தலைமை பண்பு மிக்க இராமன் முறை தப்பினான் என்றால்

இழிந்துளோர் இயற்கை! = மற்ற சிறியவர்களின் நிலை என்ன ஆகும்

என்னின்  முறை திறம்பினனால் = என்னை பொருத்தவரை முறை தவறினான்

என்று = என்று

மொழிகின்ற முகத்தான் முன்னர் = சொல்கின்ற முகத்தை உடைய வாலியின் முன்னம்

மறை திறம்பாத = வேதம் முதலிய நூல்கள் சொன்னவற்றில் இருந்து பிறழாத

வாய்மை மன்னர்க்கு = வாய்மையோடு வாழும் மன்னவர்க்கு

மனுவில் சொல்லும் = மனு தர்மத்தில் சொல்லும்

துறை திறம்பாமல் = துறை என்றால் பாதுகாப்பான இடம், இறுதியான இடம். அந்த இடம் தவறாமல்

காக்கத் தோன்றினான் = காக்க தோன்றியவன்

வந்து தோன்ற,  = வந்து தோன்றினான் = வந்து வாலி முன் தோன்றினான்

தவறு என்று ஒன்று நிகழ்ந்தால், அதை சரி செய்ய தவறு நிகழ்ந்த இடத்திற்கு போக வேண்டும். 

இராமன் நினைத்திருந்தால் இலக்குவனை மட்டும் போகச் சொல்லி இருக்கலாம். இராமனுக்குத் தெரியும், வாலி கோபத்தோடு பேசுவான் என்று. மறைந்திருந்து  அம்பு எய்தால் வாலி வாழ்த்தவா செய்வான் ? 

இருந்தாலும், இராமன் ஓடி விடவில்லை. தவறை எதிர் கொள்கிறான்.

இது முதல் பாடம் - தவறு நிகழ்ந்தால் சரி செய்ய உடனே அந்த இடத்திற்கு போக வேண்டும். தள்ளி போடக் கூடாது. வேறு யாரையும் அனுப்பவும் கூடாது. 

இராமன் மட்டும் போகாமல் இருந்திருந்தால் எவ்வளவு மோசமாக ஆகி இருக்கும். போனதால் என்ன நிகழ்ந்தது என்று பின்னால் பார்ப்போம். 

அடுத்த பாடம் என்ன தெரியுமா ?


No comments:

Post a Comment