Friday, May 24, 2013

வாலி வதம் - அவதார நோக்கம்

வாலி வதம்  - அவதார நோக்கம் 


திருமால், இராமனாக அவதாரம் எடுத்தது எதற்காக ?

இரண்டு நோக்கம்.

ஒன்று , இராவணனை அழிப்பது.

இரண்டாவது, நல்ல வாழ்கை நெறி முறைகளை காட்டி, இங்குள்ளவர்களை வீடு பேறு பெற உதவுவது.

அவதாரம் என்றாலே அதுதான் அர்த்தம்.

அப்படி யாரை இராமன் வீடு பேறு பெற உதவினான் ?

ஒரு மனிதனைக் கூட அல்ல, ஒரு விலங்கை மனிதனாக மாற்றி, பின் அந்த மனிதனை தேவர்களுக்கும் உயர்வான இடத்திற்கு கொண்டு சென்றான்.

வாலி - குரங்காக இருந்து, மனிதனாக மாறி, தேவர்களுக்கும் எட்டாத இடத்திற்கு சென்றான்.

வாலி - தான் ஒரு குரங்கு என்று அவனே கூறுகிறான். தம்பியை கொல்வேன் என்று கிளம்புகிறான். பாசம் என்பது இல்லை. பரிவு இல்லை. மன்னிக்கும் குணம் இல்லை.



கொல்லல் உற்றனை, உம்பியை; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும், இரங்கலை;
"அல்லல் செய்யல்; உனக்கு அபயம்; பிழை
புல்லல்" என்னவும், புல்லலை, பொங்கினாய். 

என்கிறான் இராமன். கொல்லல் உற்றனை. தவறு அவன் மேல் இல்லை என்று அறிந்தும். அவனுக்கு நீ இரக்கம் காட்டவில்லை. உனக்கு அபயம் என்று வந்தவனை காப்பாற்றாமல் கோபித்தாய் என்று வாலி பற்றி இராமன் கூறுகிறான்.

அப்படிப்பட்ட வாலி, இராம நாமம், இராம பாணம் இந்த இரண்டின் சம்பந்தம் ஏற்பட்ட பின் மனிதனாக மாறுகிறான்.

அறம் பற்றி பேசுகிறான். நல்லது கெட்டது எது என்று அலசுகிறான். விலங்கில் இருந்து  மனிதனாக மாறுகிறான்.

பின், இராமனை கண்ட உடன், அவன் தரிசனம் கிடைத்தவுடன், அவன் குணங்கள்  மெல்ல மெல்ல மாறி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப் போகிறான்.

- கொல்லுவேன் என்று வந்தவன் , சுக்ரீவன் தவறு செய்தால் அவனை தண்டிக்காதே என்று இராமனிடம் வரம் கேட்க்கிறான்.

- இராமனிடம் தான் தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க்கிறான் - தருமமும், தகவும், சால்பும் நீ என்று இராமனை உணர்கிறான்

- ஆவி போகும் வேளையில் அறிவு தந்து அருளினாய் என்று நன்றியோடு கூறுகிறான்.

- நீயே தருமம் என்று புகழ்கிறான்

- அனுமனை புகழ்கிறான்

- அங்கதனை தேற்றுகிறான்

- சுக்ரீவனை மன்னிக்கிறான்

இப்படி விலங்காக இருந்து, மனிதனாக மாறி, "பின்   வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான் ". வானுலகையும் தாண்டி அதற்கு மேலும் உள்ள ஒரு  உலகத்துக்கு  போனான் என்கிறான் கம்பன்....ஒரு தெய்வ நிலை எய்தினான்.

விலங்காக, மனிதனாக, தெய்வமாக மாறினான் வாலி.

அவதார நோக்கம் அங்கே நிறைவேறியது. 

அவ்வளவு கோபம் கொண்ட வாலி எப்படி மாறினான் ? எது அவனை மாற்றியது ? வாலியின் கேள்விகளுக்கு இராமனும் இலக்குவனும் தந்த பதில்கள்  எதுவும் ஆழமானவை அல்ல. ஒத்துக் கொள்ள முடியாத பதில்கள்.

இருந்தும்  ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அது வாலியை மாற்றி இருக்கிறது.

என்னை கேட்டால் இராமனின் சாநித்தியம் - அருகாமை - ஏதோ    வேண்டும்.

 பேசாமல் நிகழ்ந்த ஏதோ ஒன்று.

அருகில் இருந்த சுக்ரீவனுக்கோ, இலக்குவனுக்கோ , அனுமனுக்கோ தெரியாமல்   இராமனுக்கும் வாலிக்கும் இடையில் நடந்த ஏதோ ஒன்று வாலியை மாற்றி இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்வில் அந்த மாதிரி நிகழ்ந்திருக்கிறதா ?

பேசாமலே பேசி இருக்கிறீர்களா ?

கண் அசைவில் ? விரல்களின் நெருக்கத்தில் ? அருகருகே அமர்ந்திருந்தும் ஒரு வார்த்தை கூட  பேசாமல் மணிகணக்காக அமர்ந்து இருந்து ஏதோ ரொம்ப நேரம்  பேசியது போல் உணர்ந்து இருகிறீர்களா ?

நான் உணர்ந்து இருக்கிறேன்.

"பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ" என்கிறான் கம்பன் இராமனை பற்றி வாலியின்  வாயிலாக.

நமக்கு அங்கு நடந்தது என்ன என்று இன்றுவரை  புலப்படாமல் இருக்கிறது.

பொய் அடைத்துக் கொண்டு இருக்கிறது. அந்த அடைப்பு விலகும்போது புலப்படும்.




2 comments:

  1. superb explanation."பேசாமல் நிகழ்ந்த ஒன்று" Very touching.

    ReplyDelete
  2. சுவாரசியமான கருத்து. இது பற்றி நான் இன்று வரை கேட்டதில்லை.

    இராமனின் அம்பு பாய்ந்ததும், வாலி மனிதனாக மாறினான் என்று கொஞ்சம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இராமனைக் கண்டதும் வாலி மாறினான் என்பது கொஞ்சம் பரவாக இலை. ஒருவேளை நடக்கக் கூடும்.

    ReplyDelete