Thursday, June 13, 2013

பிரகலாதன் - நஞ்சு அமுதாகி

பிரகலாதன் - நஞ்சு அமுதாகி 


இரணியன் தன் வீரர்களிடம் பாம்புகளை விட்டு பிரகலாதனை கடிக்க விடச் சொன்னான்.

அந்த பாம்புகளும் அவனை கடித்தன.

அந்த பாம்புகள் எப்படி பட்டவை , எப்படி கடித்தன ?

மேகம் போல் கறுத்த கறை படிந்த பற்கள். அவனை கடித்தவுடன் அவைகளுக்கு பல் எல்லாம் கொட்டி போயிற்று. அவற்றின் வாயில் இருந்து நஞ்சுக்குப் பதில் அமுதம் வழிந்தது.

பாடல்

'பக்கம் நின்றவை பயத்தினின் புயற் கறைப் பசும் புனல் பகு வாயின்
கக்க, வெஞ் சிறைக் கலுழனும் நடுக்குற, கவ்விய காலத்துள்,
செக்கர் மேகத்துச் சிறு பிறை நுழைந்தன செய்கைய, வலி சிந்தி
உக்க, பற் குலம்; ஒழுகின, எயிற்று இரும் புரைதொறும் அமிழ்து ஊறி.


பொருள் 


பக்கம் நின்றவை = பிரகலாதனின் பக்கம் நின்ற அந்த பாம்புகள்


பயத்தினின் = பயத்தால். என்ன பயம் ? ஒரு புறம் இரணியன் மேல் பயம். இன்னொரு புறம் பிரகலாதனை கடித்தால் என்ன நேருமோ என்ற பயம்.

புயற் கறைப் = மேகம் போல் கறுத்த

பசும் புனல் = வெள்ளம் போல் வாயில் நுரை பொங்க

பகு வாயின் = பிளந்த வாயில்

கக்க = கக்க

வெஞ் சிறைக் கலுழனும் = வெம்மையான சிறகுகளை கொண்ட கருடனும்

நடுக்குற = பயந்து நடுங்க

கவ்விய காலத்துள் = அந்த கவ்விய நேரத்தில்

செக்கர் மேகத்துச் = சிவந்த மேகத்திற்குள்

சிறு பிறை நுழைந்தன = சிறு பிறை (நிலவு) நுழைந்த மாதிரி

செய்கைய = செய்கையில்

வலி சிந்தி = வலிமை குன்றி

உக்க  பற் குலம் = பல் எல்லாம் உதிர்ந்து

ஒழுகின = ஒழுகின

எயிற்று இரும் புரைதொறும் = உதிர்ந்த அந்த பற்குழிகளில் இருந்து

அமிழ்து ஊறி = அமிழ்தம் ஊறின

எப்படி நஞ்சு அமுதமாக மாறும் ?

வாழ்க்கையில் மனிதர்களுக்கு எவ்வளவோ துன்பம் வரலாம். சில துன்பங்களுக்கு  முடிவே இல்லாதது போல் தோன்றும். இதுதான் முடிவு. இப்படித்தான்  முடியப் போகிறது. அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வோம் என்று  தவித்துப் போகலாம்.

மிகப் பெரிய கடன். வியாபாரத்தில் மிகப் பெரிய நட்டம். மிக வேண்டியவர்களுக்கு  பெரிய நோய். என்ன செய்வோம் என்று திகைத்து போய்  நிற்பார்கள்.

மருத்துவர் கை விரித்திரிப்பார். நாள் கூட குறித்து இருப்பார்.

நடக்காதவற்றை நடக்க வைக்க அவனால் முடியும் என்ற நம்பிக்கையை இந்த  இலக்கியங்கள் மனதில்  விதைக்கின்றன.

நினையாததை எல்லாம் நிறைவேற்றி வைக்க அவனால் முடியும் என்பதை மீண்டும் மீண்டும்  இது போன்ற பாடல்கள் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன.


பெரிய பெரிய பாம்புகள், கடிக்கின்றன. சாவு நிச்சயம். என்ன செய்ய முடியும் ?
அவ்வளவுதான், பிரகலாதன் கதை முடிந்தது என்று நினைக்கும் போது , நடந்தது என்ன ?

அந்த பாம்புகள் பல் இழந்து, வலி இழந்து, அவற்றின் நஞ்சு அமுதமாக மாறியது.

அந்த நஞ்சு அமுதமாக மாறும் அந்த கணத்திற்கு முன்னால் யாராவது நினைத்து இருப்பார்களா இது நடக்கும் என்றும், இப்படி நடக்கும் என்று ?

நம்புங்கள். உங்கள் நம்பிக்கை அற்புதங்களை விளைவிக்கும்.

உங்கள் நம்பிக்கை, நம்ப முடியாதவற்றை நடத்திக்  காட்டும்.

இறைவன் இன்னும் நேரில் கூட வரவில்லை. பிரகலாதனை காப்பாற்றியது அவன் நம்பிக்கை.

பிரகலாதனுக்கு வந்ததை விடவா உங்கள்    பிரச்சனை பெரியது ?

நம்புங்கள்.

நம்பினார் கெடுவதில்லை.

இதுதான் வாழ்க்கை.

3 comments:

  1. "நம்புவதே வழி என்ற மறை தனை நாம் இன்று நம்பிவிட்டோம்" என்ற பாரதியார் பாடல் நினைவுக்கு வருகிறது.நன்றி.

    ReplyDelete
  2. தன்னை நம்ப வேண்டுமா, எல்லாம் இழந்துவிட்ட போதும் நல்லது நடக்கக்கூடும் என்று நம்ப வேண்டுமா, இறைவனை நம்ப வேண்டுமா??

    சும்மா குருட்டாம்போக்கில் இறைவனை நம்பி என்ன பயன்? ("என்னடா, நாளைக்குப் பரிட்சைக்குப் படிச்சாச்சா?" "எல்லாம் இறைவன் மேல பாரத்தைப் போட்டு விட்டேன்!")

    ReplyDelete