Saturday, June 15, 2013

பிரகலாதன் - பயம் ஏன் ?

பிரகலாதன் - பயம் ஏன் ?


வாழ்வில் துன்பங்கள் மலை போல் வரலாம் ? ஆபத்து நம்மை உலுக்கிப் போடலாம்.

உலகிலேயே மிகப் பெரிய பலவான், வீரன் இரணியன். தேவர்களும், முனிவர்களும் அவனிடம் நடுங்கி நின்றனர்.

அப்படிப் பட்ட அரக்கன், பிரகலாதனை கொல்லும் படி தன்  வீரர்களுக்கு உத்தரவு இடுகிறான்.

பிரகலாதன் அப்படி ஒன்றும் பெரிய பலசாலி இல்லை. சிரிய பாலகன்.

அவனை கயிற்றில் கட்டி, உலகிலேயே பெரிய யானையான இந்திரனின் ஐராவதம் என்ற யானையை கொண்டு மிதிக்கச் செய்யும்படி வீரர்களுக்கு ஆணை இடுகிறான்.

இதை விட பெரிய துன்பம், ஆபத்து என்ன இருக்க முடியும் ?

தப்பித்து ஓட முடியாது. எதிர்த்து சண்டை போட முடியாது ? இதுதான் எல்லை, இதுதான் முடிவு...என்ன செய்வது....என்ன செய்வது ?

யோசித்துப் பாருங்கள்.  துன்பத்தை பகரிந்து கொள்ளக் கூட யாரும் இல்லை.

தன்னந் தனியனாய் மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்கி நிற்கிறான்.

அவன் அந்த யானையிடம் வணங்கிச் சொன்னான்..உன் முன்னவனான கஜேந்திரனை காப்பாற்றியவன் என் மனத்தில் இருக்கிறான் என்று.

அதை கேட்டு யானை, அவனை தொழுது, பயந்து விலகிச் சென்றது.

யானைக்கு நம் மொழி தெரியுமா ? யானைக்கு கஜேந்திரன் கதை தெரியுமா என்பதல்ல கேள்வி.

பிரகலாதன் கதை எதற்கு இருக்கிறது ?

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இன்னல் வந்தாலும், ஆபத்து வந்தாலும், இறை நம்பிக்கை இருந்தால் அந்த துன்பமும், ஆபத்தும் உங்களை கண்டு பயந்து, உங்களை வணங்கி விலகிச் செல்லும் என்ற நம்பிக்கையை விதைக்க வந்தவை இந்த கதைகள்.

ஒரு புறம் கோபம் கொண்ட இரணியன்.

மறு புறம் மிகப் பலம் கொண்ட ஐராவதம்.

இன்னொரு புறம் இரணியனின் வீரர்கள்.

நம்பிக்கையின் சக்தியை சொல்ல வந்தவை இந்த கதைகள்.

பாடல்

'என்னா முன்னம், இருங் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த, நிலத்தின்,
அன்னானைத் தொழுது, அஞ்சி அகன்றது;
ஒன்னார் அத் திறம் எய்தி உரைத்தார்.



பொருள் 



என்னா முன்னம் = உன் முன்னவனை காத்தவன் என் மனத்தில் இருக்கிறான் என்று சொல்லி முடிப்பதற்குள்

இருங் களிறும் = பெரிய வலிமையான யானையும் (களிறு = யானை)

தன் = தன்னுடைய

பொன் ஆர் ஓடை பொருந்த = ஓடை என்றால் நெற்றியில் கட்டும் பட்டயம். பொன்னால் செய்யப்பட்ட தன் நெற்றிப் பட்டயம், பொருந்த. எதனோடு பொருந்த ? 

நிலத்தின் = நிலத்தில். அதாவது தலை தரையில் படும்படி

அன்னானைத் தொழுது = அவனை (பிரகலாதனை) தொழுது

அஞ்சி அகன்றது = பயந்து விலகிச் சென்றது

ஒன்னார் = அருமையான வார்த்தை. வேற்றுமை இருந்தால் பலவாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும். எல்லாம் ஒத்துப் போனால் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். அப்படி ஒன்றாக இல்லாதவர் ஒன்னார். இங்கே , இரணியனின் வீரர்கள். உங்களிடம் இருந்து வேறு பட்டவர்கள், உங்களுக்கு ஒன்னார்.


அத் திறம் எய்தி உரைத்தார் = அப்படி நடந்ததை சென்று இரணியனிடம் சொன்னார்கள்



1 comment:

  1. அப்புறம் இரணியன் அந்த யானையை போட்டு அடிக்கவில்லையா?

    ReplyDelete