Sunday, June 16, 2013

பிரகலாதன் - கரை காணா வெள்ளத்து உய்த்திடுமின்

பிரகலாதன் - கரை காணா வெள்ளத்து உய்த்திடுமின்



இரணியனும் விட்டபாடில்லை.

பிரகலாதனை தீயில் இட்டு பொசுக்கச் சொன்னான். அது குளிர்ந்தது.
பாம்புகளை விட்டு கடிக்கச் செய்தான் - நஞ்சு அமுதமாகியது
யானையை விட்டு மிதிக்கச் செய்தான் - அது பயந்து, வணங்கிச் சென்றது.

அடுத்து, பிரகலாதனை கல்லை கடலில் தூக்கிப் போடுங்கள் என்றான்.

சொல்பவன் கம்பன். அதிலும் ஒரு  கவிச் சுவையை சேர்க்கிறான்.

நகர்த்த கூட முடியாத பெரிய மலை போன்ற கல்லோடு, இந்த கள்ளனை (பிரகாலதனை) எல்லோரும் பார்த்து நகைக்கும்படி, இறுகக் கட்டி, கரை காண முடியாத கடலின் நடுவில் கொண்டு போய் போடுங்கள்

என்று ஆணையிடுகிறான்

பாடல்

' "தள்ளத் தக்கு இல் பெருஞ் சயிலத்தோடு
எள்ளக் கட்டி எடுத்து விசித்து,
கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா
வெள்ளத்து உய்த்திடுமின்" என விட்டான்.


பொருள்




தள்ளத் தக்கு இல் = தள்ளுவதற்கு தகுதி இல்லாத. அதாவது தள்ள முடியாத.

பெருஞ் சயிலத்தோடு = பெரிய மலை போன்ற கல்லோடு

எள்ளக் = எல்லோரும் எள்ளி நகைக்கும்படி

கட்டி எடுத்து விசித்து = கட்டி எடுத்து பிணைத்து (விசித்து கட்டுதல் = இறுகக் கட்டுதல்)

கள்ளத்து = கள்ள நெஞ்சினனானை இவனை

இங்கு இவனைக் = இங்கு இவனை

கரை காணா = கரை காண முடியாத. ஆற்றிலோ குளத்திலோ போட்டால் கரை கண்டு விடுவான். கரை காண முடியாத இடம் என்றால் கடலுக்குள் வெகு தூரம் உள்ளே போய் என்று அர்த்தம்.



வெள்ளத்து உய்த்திடுமின்" என விட்டான் = கடலில் கொண்டு போய் போடுங்கள்  என்றான் 

பிரகலாதன், அதிலும் இறக்காமல் மீண்டு வந்தான் என்று உங்களுக்குத் தெரியும். எப்படி வந்தான் தெரியுமா ?



No comments:

Post a Comment