Monday, June 17, 2013

திருக்குறள் - சோதனைகளை வெற்றி கொள்ள

திருக்குறள் - சோதனைகளை வெற்றி கொள்ள 


வாழ்வில் நிறைய சோதனைகள் வரும். தோல்விகள் வரும். அந்த சோதனைகளும் தோல்விகளும் தரும் துன்பத்தை எப்படி கடந்து வெற்றி கொள்வது ?

எருது வண்டி இழுப்பதை பார்த்து இருக்கிறீர்களா ? மேடு, பள்ளம், மணல், சகதி , என்று அது செல்லும் வழியில் பல தடங்கல்கள் வரலாம். அந்த எருது அதை எல்லாம் பார்த்து சோர்ந்து நின்று விடாது. அது பாட்டுக்கு வண்டியை இழுத்துக் கொண்டே சென்று அது போய் சேர வேண்டிய இடத்தை சென்று அடையும்.

எடுத்த செயலை முடிக்க விடாமுயற்சி வேண்டும்.

சில பேர் வேலை செய்வதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். வேலை செய்வது கிடையாது. அப்படியே வேலையை தொடங்கினாலும், ஒரு சோம்பல், ஒரு சுணக்கம் வந்து பாதியில் விட்டு விடுவார்கள்.

எருது போல் எத்தனை தடை வந்தாலும் விடா முயற்சியோடு எடுத்த காரியத்தை செய்பவனுக்கு வந்த துன்பம் துன்பப்பட்டு ஓடி விடும்.

பாடல்

மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.

சீர் பிரித்த பின்

மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற 
இடுக்கண் இடர் பாடு உடைத்து 


பொருள்




மடுத்த வாயெல்லாம் = துன்பம், தடை வந்த இடத்தில் எல்லாம்

பகடு அன்னான் = எருது போன்றவன் (யானை என்று பொருள் கூறுவாரும் உண்டு)

உற்ற இடுக்கண் = அடைந்த துன்பம்

 இடர் பாடு உடைத்து = துன்பம் அடையும்.

அதாவது, அவன் பெற்ற துன்பமே துன்பம் அடையும்.

இடர்பாடு.

இடர்பாட்டினால் வரும் துன்பம்.

துன்பத்தை வெல்லும் விடா முயற்சி.

அந்த விடா முயற்சியால் துன்பமே துன்பம் அடையும்.





2 comments:

  1. அடைந்த துன்பம் துன்பம் அடையும். இது நல்லா இருக்கு

    ReplyDelete
  2. எப்பப் பார்த்தாலும் எருது போன்றவன் அல்லன். "துன்பம் வரும்போது எல்லாம் எருது போன்றவன்" (மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான்). அப்படிப்பட்டவன் அடைத்த துன்பமே துன்பம் அடையும்! ஆஹா! அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete