Saturday, June 22, 2013

திருக்குறள் - அன்பு கட்டாயம் செய்ய வேண்டும்

திருக்குறள் - அன்பு கட்டாயம் செய்ய வேண்டும்



என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துவதும், செலுத்தாமல் இருப்பதும் நம் விருப்பம்தானே ? அதை யாரும் நம் மீது திணிக்க முடியாது தானே ? நீங்கள் மற்றவர்கள் மேல் அன்போடு இருக்க வேண்டும் என்று சட்டம் போட முடியுமா ? முடியாது அல்லவா ?

அப்படி அல்ல என்கிறார் வள்ளுவர்

நீங்கள் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துவது என்பது உங்கள் விருப்பம் அல்ல. நீங்கள் கட்டாயம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தியே ஆக வேண்டும் என்கிறார்.

இது என்னடா வம்பா போச்சு....அப்படி நான் யார் மேலும் அன்பு செலுத்தாமல் இருந்தால் என்ன ஆகும் ? என்று கேட்டீர்கள் என்றால் அதற்க்கும் வள்ளுவர் விடை வைத்து இருக்கிறார்.

அப்படி அன்பு செய்யாதவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்கிறார்.

யார் தண்டிப்பா ? என்று கேட்டால் ....

அறம் தண்டிக்கும் என்கிறார்.

என்ன தண்டனை தெரியுமா ? கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுப்பது...வருந்த வருந்த உயிரை எடுப்பதுதான் அந்த தண்டனை.

நான் சொன்னா நம்ப மாட்டீங்க....பாடலைப் பாருங்க...

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

கொஞ்சம் சீர் பிரிப்போம் ...

என்பு இல்லதனை வெயில் போலக் காயுமே
அன்பு இலதனை அறம்

பொருள்

என்பு என்றால் எலும்பு. எலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ அது போல அன்பு இல்லாததை  அறம் காயும்.

எலும்பு இல்லாதது எது ? புழு.

இந்த புழு என்ன செய்யும்...அதனுடைய மறைவிடத்தில் இருந்து வெளிச்சம் கண்டவுடன் வெளியே வரும். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து வெளியே வரும்.  இளம் சூடான வெயிலில் குளிர் காயும். நேரம் ஏற ஏற சூடு அதிகம் ஆகும். திருப்பி தன் இடத்திற்கு போகலாம் என்றால் அதனால் வேகமாக ஓட முடியாது. நகர்ந்து தான் போக முடியும். தரையோ சுட்டு பொசுக்கும். ஓடி ஒதுங்கவும் முடியாது. சூடு பொறுக்கவும் முடியாது. கடைசியில் உடலில் உள்ள நீர் வற்றிபோய் கருகி சாகும்.

அது போல, அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை முதலில் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் ...நாள் நாள் ஆக ஆக துன்பபடுவான்.  அறக் கடவுள் அவனை தண்டிப்பார்.

சூரியன் வெளி வரும் போது வெளிச்சம் கண்ணுக்குத் தெரியும். சூடு கண்ணுக்குத் தெரியாது.

எப்படி கண்ணுக்குத் தெரியாத சூட்டில் புழு துடிதுடித்து இறக்குமோ, அது போல் அன்பில்லாதவன்  அறத்தால் இறப்பான்.

சூரியன், அந்த புழுவை வெளியில் இழுத்துப் போட்டு பொசுக்குவது இல்லை. புழு தானே வெளியே வரும்.  இளம் சூடு, வெளிச்சம் இவற்றை கண்டு அதுவே வெளியே வந்து   சூடு கொண்டு மாளும் .

அது போல, அன்பில்லாதவன், தானே அழிவைத் தேடிக் கொள்வான். யாரும் போய்  அவனை பிடித்து வந்து தண்டிக்க வேண்டியது இல்லை.

அன்பு செய்து கொண்டே இருங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.



2 comments:

  1. அழகான குறள். அருமையான விளக்கம். நன்றி!

    ReplyDelete
  2. யார் மேல் அன்பு செய்ய வேண்டும் என்பது இந்தக் குரலில் சொல்லப்படவில்லை. அப்படியென்றால், எல்லோர் மேலும் அன்பு செய்ய வேண்டும் என்பது பொருள் போலும்.

    ReplyDelete