Tuesday, June 4, 2013

பிரகலாதன் இறை தத்துவம் - உள்ளங்கை நெல்லிக் கனி

பிரகலாதன் இறை தத்துவம் - உள்ளங்கை நெல்லிக் கனி 


கொஞ்சம் யுத்த களத்தை விட்டு பின்னோக்கி (flash  back ) செல்வோம்.

பிரகலாதன் அவனுடைய தந்தையான இரணியனை துதிக்க மறுக்கிறான். இரணியன் கேட்கிறான் நீ வணங்கும் அந்த நாராயணன் யார் என்று ?

இரணியன் இறை தத்துவத்தை விளக்குகிறான். கிட்டத்தட்ட இருபது பாடல்கள். 

Philosophy , Theology என்று கம்பன் பின்னுகிறான். இறை தத்துவத்தின் உச்சியை தொடுகிறான்.

அதிலிருந்து சில பாடல்கள் 


விதை இல்லாமல் மரம் இல்லை. அரசனே, நீ மயக்கம்  (prejudice ) கொள்ளாமல் கேட்டால்,, உள்ளங்கை நெல்லிக் கனி போல இதை நீயே காணலாம் என்று இறை தன்மையை விளக்குகிறான்.  

பாடல் 

"வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த! நின்
பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவேன்;
'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று' எனா,
கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால்.

பொருள் 



வித்து இன்றி = விதை இல்லாமல்

விளைவது ஒன்று இல்லை = எதுவும் முளைக்காது

வேந்த = வேந்தனே 

நின் பித்து இன்றி = பித்து இல்லாமல், மயக்கம் இல்லாமல்

உணர்தியேல் = உணர்வாயானால்

அளவைப் பெய்குவேன் = வழியை கூறுவேன்

உய்த்து = உன் மனதை அதில் செலுத்தி

ஒன்றும் ஒழிவு இன்றி = இடை விடாமல்

உணர்தற்பாற்று ' எனா = சிந்தித்து இருப்பாயானால்

கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால் = உள்ளங்கை நெல்லிக் கனி போல் காண்பாய்

மூன்று விஷயங்களை பிரகலாதன் கூறுகிறான்.

முதலாவது - பித்து இன்றி. அதாவது மயக்கம் இன்றி. இரணியன் தான் தான் கடவுள் என்று  முதலிலேயே முடிவு செய்து விடுகிறான். சில பேர் கடவுளே இல்லை என்று முதலிலேயே முடிவு செய்து விடுவார்கள். அப்புறம் ஆராய்ச்சி செய்வது. அது தவறு. பித்து என்றால் நடு நிலை இன்மை. மன மயக்கம் இல்லாமல் அணுக வேண்டும்

இரண்டாவது, இடை விடாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ பொழுது போகாமல், கிடைத்த நேரத்தில்  நண்பர்களோடு அரட்டை அடிப்பதற்கு அல்ல இறை தத்துவம்.

மூன்றாவது, இறை என்பதை ஏதோ ஒரு எண்ண வடிவம் அல்ல. உள்ளங்கை நெல்லிக்கனி எவ்வளவு உண்மையோ, தெளிவானதோ அப்படி அதை உணர முடியும். உள்ளங்கை நெல்லிக்கனியை நாம் அறிய மற்றவர்கள் உதவி தேவை இல்லை. நம் கை அதை தொட்டுக் கொண்டு இருக்கிறது. நாம் அதை காண, சுவைக்க, நுகர முடியும். அது போல் இறைவனை அறிய முடியும் என்கிறான் பிரகலாதன் (கம்பன்).


அப்படி என்னதான் சொல்லுகிறான் என்று பார்ப்போமே 


No comments:

Post a Comment