Wednesday, June 5, 2013

பிரகலாதன் இறை தத்துவம் - பின் இலன் முன் இலன்

பிரகலாதன் இறை தத்துவம் - பின் இலன் முன் இலன் 


பிரகலாதன் இறைவனின் தன்மைகளை பற்றி கூறிக் கொண்டு போகிறான்.

ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை ஆழமான சிந்தனை கம்பனுக்கு இருந்திருக்கிறது. இது ஒரு தனிப் பட்ட மனிதனின் சிந்தனையாக இருந்திருக்க முடியாது. அவன் இருந்த காலத்தில் இந்த கேள்விகளும், இவற்றிற்கான பல் வேறு பதில்களும் இருந்திருக்கும்.

இந்த தமிழ் சமுதாயம் எவ்வளவு ஆழமாக சிந்திருக்கிறது. சிந்தித்து சிந்தித்து சில விடைகளை கண்டிருக்கிறது.

இறை சிந்தனை அவற்றில் ஒன்று.

இந்த உலகம் எப்போது , எங்கிருந்து வந்தது ?

இந்த உலகத்திற்கு தோற்றம் இருக்கும் என்றால், அதற்கு முடிவும் இருக்கும் அல்லவா ?

தோன்றுவதற்கு முன்னால் அது எங்கே எப்படி இருந்தது ?

முடியும் என்றால், முடிந்த பின்னால் எங்கே எப்படி முடியும் ?

இந்த உலகம் தானே தோன்றவில்லை என்றால் யார் தோற்றுவித்தது ?

அப்படி யாராவது தோற்றி வித்தார்கள் என்றால் அவன் அல்லது எது எப்போது தோன்றியது ?

சரி, இந்த உலகம் தோன்றி விட்டது...அது எப்படி நிலைத்து இருக்கிறது ? ஏன் அது தோன்றிய மாதிரியே மறைந்து விடவில்லை ?

இந்த உலகம் எல்லாம் அடிப்படையில் அணுவால் ஆனது என்று அறிவியல் கண்டு சொன்னது. பின் அணு அல்ல அடிப்படை, அதற்க்கும் கீழ் சில துகள்கள் இருக்கின்றன -- எலெக்ட்ரான், ப்ரோடான் போன்ற துகள்கள் இருக்கின்றன என்று சொன்னது. பின், இல்லை அது கூட அல்ல, அதற்கும் கீழே சில துகள்கள் இருக்கின்றன போசான், குவார்க் போன்ற துகள்கள் இருக்கின்றன என்கிறது.  இப்படியே போய்  கொண்டு இருந்தால் எதில் போய் முடியும் ? ஒரு வேளை இந்த உலகம் முழுதும் ஏதோ ஒரே ஒரு பொருளால் ஆனதுதான் என்ற முடிவுக்கு வருமோ ?

இது ஒரு புறம் இருக்க, பொருள்கள் எல்லாம் சக்தியால் ஆனது என்று ஐன்ஸ்டீன் நிருபித்தார். எல்லாம் ஒரே சக்தியால் ஆனது என்பது அறிவியல் ஒப்புக்கொண்ட முடிவு. அதில் ஒரு சந்தேகமும் இல்லை.

அப்படி என்றால் அந்த சக்தி எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறது. அந்த சக்தியால் தான் இந்த உலகம் உருவாக்கப் பட்டு இருக்கிறது. அந்த சக்தி எல்லா பொருள்களுக்கும் உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது, அதுவே பொருளாகவும் இருக்கிறது. பொருள்கள் சிதைந்து மீண்டும் சக்த்தியாக மாறி விடுகின்றன. இது அறிவியலின் இன்றைய சித்தாந்தம்.

இந்த உலகம் பெரு வெடிப்பில் (Big Bang ) இருந்து வெடித்து சிதறியது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. அந்த பெரு வெடிப்புக்குப் முன்னால் என்ன நடந்தது என்றால், அதை இந்த அறிவியல் அறியவே முடியாது என்று அறிவியல் நிருபிக்கிறது. மனிதனால் நிச்சயமாக தொடக்த்திற்கு முன்னால் என்ன நடந்தது என்று அறியவே முடியாது. இது சர்வ நிச்சயம்.

இந்த கருத்தை கம்பனும் சொல்கிறான்.


இந்த பாடலைப் பாருங்கள். பாடலின் சிந்தனை வீச்சும், ஆழமும், அதுக்கு மேலே தெரியலையே என்று ஒத்துக் கொள்ளும் நேர்மையும் சிலிர்க்க வைக்கும்

பாடல்


' "தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை -
தன்னுளே நின்று, தான் அவற்றுள் தங்குவான்,
பின் இலன் முன் இலன், ஒருவன்; பேர்கிலன்;
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ ?


பொருள் 



தன்னுளே உலகங்கள் எவையும் தந்து = தனக்குள்ளே உலகங்கள் யாவும் தந்து. இந்த உலகம் அவனில் இருந்து தோன்றியது. 

அவை = அந்த உலகங்கள்

தன்னுளே நின்று = தனக்குள்ளேயே நின்று

தான் அவற்றுள் தங்குவான் = தான் அவற்றிற்குள் இருப்பான்

உலகம் அவனுக்குள் இருக்கிறது. அவன் உலகத்திற்குள் இருக்கின்றான்.

இந்த உலகம், இந்த இயற்கை இறைவனின் வெளிப்பாடு.

எப்படி என் கை, என் கால் என்னுடைய வெளிப்பாடோ அது போல் இந்த உலகம் இறைவனின் வெளிப்பாடு.

இங்குள்ள ஒவ்வொரு உயிரும், பொருளும் இறை அம்சம் கொண்டது. இந்த எழுத்து தெய்வம், இந்த எழுதுகோலும் தெய்வம் என்றான் பாரதி. அது சத்யம்.

பின் இலன் = அவனுக்கு அப்புறம் எதுவும் இல்லை. அவன் தான் எல்லை.

முன் இலன் = அவனுக்கு முன்னால் என்று எதுவும் கிடையாது (ஏன் முன்னும் பின்னும் கிடையாது தனியே பார்ப்போம்).

ஒருவன் = அவன் ஒருவனே

பேர்கிலன் = நகராதவன், பிறழாதவன். அதாவது நிலைத்து நிற்ப்பவன். அவன் நகர வேண்டும் என்றால் எங்கே நகர்வான் ? எல்லாம் அவனே என்று ஆனபின் அவன் நகர்வது எங்கே ? நான் என்பதும், என்ன சுற்றியுள்ள வெளியும் வேறு வேறு என்பதால் நான் அதில் நகர முடிகிறது. நான் எனக்குள்ளேயே எப்படி நகர முடியும் ? நான் எனக்கு வெளியே நகர முடியும். இறைவன் பேர்கிலன். அவன் தான் எங்கும் நிறைந்து இருக்கிறானே.

தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ  ? = அவனின் தொடக்கம் யாரால் கண்டு சொல்ல முடியும் ? (முடியாது என்பது அர்த்தம்). அவன் எப்போது தோன்றினான், எப்படி தோன்றினான் என்பது நமக்குத் தெரியாது.

பாடலைப் இன்னொரு புறம் படித்துப் பாருங்கள்.

இந்த ஒரு பிறவி போதாது கம்ப இராமாயணம் முழுதும் படித்து தெரிந்து கொள்ள . அதில் பாதி ஏற்கனவே போய் விட்டது.  மீதி நாட்களிலாவது முடிந்த வரை  அறிந்து கொள்ள முயல்வோம்.....




3 comments:

  1. WOW!WE need one more kamban to appreciate kamban's work!

    ReplyDelete
  2. I once read a book called "The Tao of Physics." I don't remember the specifics, but it draws lots of parallels between Eastern philosophical thought and modern particle theories. I remember thinking that philosophical thought alone is not enough to establish science.

    This kind of characterization of God is very common in literature. I think you have shared other poems with similar characterization. But, of course, it does not follow that Kamban, or the Tamil society of those days, knew all about our scientific theories.

    ReplyDelete
  3. I know. I am not saying these are scientific. It it interesting to know such thoughts were floating around. They thought about this. They extrapolated solution like this. May be not in a scientific manner.....and wrote such a beautiful poem around it.....

    ReplyDelete