Monday, June 10, 2013

வாலி வதம் - ஈறு இல் அறம்

வாலி வதம் - ஈறு இல் அறம் 




அறத்திற்கு எல்லை கிடையாது. நாம் படித்தது, நாம் அறிந்ததுதான் அறம் என்று இறுதியாக உறுதியாக கூற முடியாது.

கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு என்று சட்டத்தின் வரைவு விசாலாமகிக் கொண்டே போவது போல அறம் பரந்து பட்டது.

இராமனுக்கு அது தெரியும். நான் அறிந்ததுதான் அறம் என்று அவன் சாதிக்க வில்லை.

விஸ்வாமித்திரன் சொல்கிறான்....

அந்தம் இல்லாத அறத்தை பார்த்து கூறுகிறேன். இவளை பார்த்து கோபம் கொண்டு கூறுகிறேன். நீ கோபப் படாமல் இப்படி சாந்தமாக நிற்பது அருளின் பாற்பட்டது அன்று. இந்த அரக்கியை கொல் என்று அந்தணன் கூறினான்.

ஒவ்வொரு வார்த்தையும் கம்பன் தேர்ந்தெடுத்து கோர்த்த கவிதை

பாடல்

'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 

பொருள்





ஈறு இல் = ஈறு இல்லாத, முடிவு இல்லாத, எல்லை இல்லாத

நல் அறம் = நன்மை தரும் அறம்

பார்த்து இசைத்தேன் = பார்த்து கூறினேன்

இவட் = இவள் (தாடகை)

சீறி நின்று = சீறி நின்று

இது செப்புகின்றேன் அலேன் = சொல்லுகிறேன்

ஆறி நின்றது = நீ இப்படி அமைதியாக நிற்பது. சூடு இல்லாமல் இருப்பது. அதாவது குளிர்ந்து இருப்பது. இராமனிடம் ஒரு பதட்டமும் இல்லை. Cool dude. 

அருள் அன்று = அருள் அன்று. அருள் இல்லை

அரக்கியைக் கோறி = இந்த அரக்கியை கொல்

என்று = என்று

எதிர் அந்தணன் கூறினான் = எதிரில் நின்ற அந்தணன் கூறினான்.

விஸ்வாமித்திரன் பிறப்பால் க்ஷத்ரியன். கம்பன் வேண்டும் என்றே அவனை அந்தணன்  என்று கூறுகிறான்.

ஏன் ?

க்ஷத்ரியன் போர்க் குணம் கொண்டவன். அந்தணன் அப்படி அல்ல.. அந்தணன்  என்பவன்  அறவோன் என்று கூறுவான். அந்தணன் என்பவன் அற வழியில் நிற்பவன்.

 இது ஒரு பாடல். இப்படி 12000 பாடல் உள்ளது. ஒரு பிறவி போதுமா கம்பனை படித்து முடிக்க ? தினம் ஒன்றாகப் படித்தால் கூட 32 வருடம் ஆகுமே ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாலியை கொன்றது அறம் அல்ல அன்று உங்களுக்குத் தெரிகிறது. அதுதான் முடிவா ? உங்களுக்குத் தெரிந்த அறம்தான் முடிவான ஒன்றா ?

இராமன் அங்கும் வழி நடத்தப் பட்டானா ? இங்கே விச்வாமித்திரன் வழி நடத்திய மாதிரி ....

2 comments:

  1. "இவட் சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்" - இங்கே, "அலேன்" என்பது ஒரு மறுப்புச் சொல்லா? அப்படியானால், "நான் இவள் மேல் கோபம் கொண்டு சொல்லவில்லை" (அதாவது, கோபம் மட்டும் அல்லாமல், அறம் பற்றி யோசித்தே சொல்கிறேன்) என்று பொருள் கொள்ளலாமா?

    ReplyDelete
  2. தாடகை வதம் நடந்தபோது, இராமன் சிறுவன். வாலி வதம் நடந்த போதோ அவன் வளர்ந்தவன். திருமணம் முடித்து, அரசனாகும் தகுதி உடையவன். அவன் வேறு யார் சொல்லையோ கேட்டு வாலியைக் கொன்றான் என்று எப்படி வாதிக்க முடியும்? யார் சொன்னாலும் தலை ஆட்ட அவன் என்ன தஞ்சாவூர் பொம்மையா? எப்படியோ, உன் வாதத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete