Saturday, July 13, 2013

ஜடாயு - உவமையின் உச்சம்

ஜடாயு - உவமையின் உச்சம் 


இந்தப் பாடல் கம்பனின் உவமையின் உச்சம்.

ஜடாயுவுக்கும் இராவணனுக்கும் பலத்த போர்.

இராவணன் சக்தி வாய்ந்த ஒரு சூலாயுதத்தை ஜடாயு மேல் எறிகிறான்.

உன் சூலாயுதத்தை கண்டு நான் பயப்படுவேன் என்று நினைக்கிறாயா என்று துணிந்து தன் மார்பை காட்டுகிறான் ஜடாயு. அந்த வேல் அவனை நோக்கி வேகமாக வருகிறது. ஒரு நிமிடம் திகைத்து பின் மீள்கிறது.

அந்த வேல் எப்படி நின்றது பின் எப்படி சென்றது என்று கூற வந்த கம்பன் மூன்று உவமைகளை சொல்கிறான். இதுவரை யாரும் யோசித்துக் கூட இருக்க முடியாது.....

முதல் உவமை - விலை மகளின் வீட்டுக்கு கையில் பணம் இல்லாமல் சென்றவன் எப்படி, அவள் வீட்டு வாசலில் தயங்கி நின்று பின் திரும்புவானோ அது மாதிரி திரும்பியது. அவள் வீட்டு வாசலில் நிற்பான்...உள்ளே போகலாமா அல்லது வேண்டாமா என்று தயங்குவான், வாசலில் நின்று அவள் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று நிற்பான் . பின் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போவான் அது போல அந்த சூலாயுதம் நின்று பின் சென்றது.

இது முதல் உதாரணம், முதல் உவமை.


இரண்டாவது, ஒருவர் வீட்டுக்கு விருந்தினாராய் சென்ற ஒருவன், சரியானபடி உபசாரம் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தி திரும்புவானோ, அப்படி திரும்பியது. முதலில் ஆர்வமாய் போவான், பின் சிறப்பான உபசாரம் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தி செல்வானோ அது போல் வேகமாக சென்ற சூலாயுதம், வருந்தி மீண்டது. இப்படி ஒரு நல்லவனை கொல்ல வந்தோமே என்று வருந்தி சென்றது.

இது இரண்டாவது உதாரணம்.

அடுத்தது, ஒரு உண்மையான துறவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவிட்ட ஒரு குடும்பப் பெண் எப்படி மனம் வருந்தி தன் பார்வையை சட்டென்று எப்படி திருப்பிக் கொள்வாளோ, அப்படி அந்த சூலாயுதம் வெட்கி திரும்பியது.

பாடல்

பொன் நோக்கியர்தம் புலன் 
     நோக்கிய புன்கணோரும், 
இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும், ஆம் 
     என மீண்டது, அவ்வேல்.

பொருள்





பொன் நோக்கியர் = பொன்னை நோக்கிய பெண்கள் (விலை மகளிர் )

தம் புலன் = அவர்களின் புலன்களை (கண், இதழ்...)

நோக்கிய = பார்க்க விரும்பிய

 புன்கணோரும் = வறுமை உடையவனும்

இன் நோக்கியர் = இனிமை நோக்கி வந்த வந்தவன் 

 இல் வழி = அது இல்லாத வழி

எய்திய நல் விருந்தும் = நடந்த நல் விருந்தினனும்

தன் நோக்கிய = தன்னையே நோக்கிய (தன்னை உணர்ந்த )

நெஞ்சுடை யோகியர் = மனதை  உடைய யோகியர்

தம்மைச் சார்ந்த = அவர்கள் மேல் சென்று சார்ந்த

மென் நோக்கியர் நோக்கமும் = மென்மையான குல மகளின் பார்வை போல

ஆம் = அது போல

என மீண்டது, அவ்வேல் = மீண்டது அந்த வேல்

ஒவ்வொருவரின் மன நிலையும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்

இதை விட சிறப்பான உவமை இருக்குமா ?



1 comment:

  1. இந்தப் பாடலைப் பற்றி நீ முன்பே எழுதியதாக நினைவு. ஆனால் அற்புதமான பாடல். என்ன அழகாக எழுதியிருக்கிறார்!

    ReplyDelete