Thursday, July 18, 2013

குசேலோபாக்கியானம் - கொடிது கொடிது, வறுமை கொடிது

குசேலோபாக்கியானம் - கொடிது கொடிது, வறுமை கொடிது 


கொடிது கொடிது வறுமை கொடிது என்றாள் ஔவை.

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் இந்த பாரினை அழித்திடுவோம் என்று வெகுண்டான் பாரதி.

இதற்கும் ஒரு படி மேலே போய் , பிச்சை பெற்றுதான் வாழ வேண்டும் என்றால் கெடுக இவ்வுலகு இயற்றியான் என்று அந்த இறைவனே கெட்டு ஒழிக என்று குறள் கொடுத்தார்

வறுமையில் பெரிய வறுமை பிள்ளைகள் பசித்து அழுவதை பார்ப்பது. அவர்களின் பசியை தீர்க்க முடியாத வறுமை மிகப் பெரிய கொடுமை.

குசேலரின் வீட்டில் வறுமை நடு வீட்டில் சம்மணம் இட்டு அமர்ந்து இருந்தது.

இருக்கும் உணவோ கொஞ்சம். பிள்ளைகளோ 27 பேர். உணவு பற்றாக் குறை. ஒரு பிள்ளைக்கு உணவு தரும்போது இன்னொரு பிள்ளை தனக்கும் வேண்டும் என்று அழும். அதற்கு தர முயலும் போது இன்னொன்று அழும்.

யாருக்கென்று தருவாள் அவள் ?  எந்தப் பிள்ளைக்கு என்று தருவது ? எந்த பிள்ளையை பட்டினி போடுவது ?

பாடல்


ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு
          கைநீட்டும் உந்திமேல் வீழ்ந்(து), 
     இருமகவுங் கைநீட்டு மும்மகவுங்
          கைநீட்டும் என்செய் வாளால்
     பொருமியொரு மகவழுங்கண் பிசைந்தழும்மற்
          றொருமகவு புரண்டு வீழாப், 
     பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங்
          ஙனஞ்சகிப்பாள் பெரிதும் பாவம். 

சீர் பிரித்த பின்


ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு 
கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து 
இரு மகவும் கை நீட்டும் மும் மகவும்
கை நீட்டும் என் செய்வாளால் 
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் 
மற்றொரு மகவு புரண்டு வீழாப் 
பேரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்கனம் 
சகிப்பாள் பெரிதும் பாவம் 

பொருள்





ஒரு மகவுக்கு அளித்திடும் போது = ஒரு பிள்ளைக்கு உணவு அளித்திடும் போது

ஒரு மகவு கை நீட்டும் = எனக்கும் வேண்டும் என்று இன்னொரு பிள்ளை கை நீட்டும்

உந்தி மேல் வீழ்ந்து = மடியில் விழுந்து

இரு மகவும் கை நீட்டும் = இரண்டு பிள்ளைகளும் "அம்மா, எனக்கு பசிக்குது, சோறு தா " கை நீட்டும்

மும் மகவும் கை நீட்டும் = இதற்க்கிடையில் மூன்றாவது பிள்ளை கையை நீட்டும், எனக்கு சோறு என்று

என் செய்வாளால் = அவள் என்னதான் செய்வாள் ?

பொருமி ஒரு மகவு அழும் = இன்னொரு பிள்ளை இருமி அழும்

கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு = கண்ணை கசக்கிக் கொண்டு இன்னொரு பிள்ளை அழும்

புரண்டு வீழாப் பெரு  நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு = இன்னொரு பிள்ளை தரையில் கிடந்து புரண்டு அழும்

எங்கனம் சகிப்பாள் = இதை எப்படி சகிப்பாள் அவள் ?

பெரிதும் பாவம்  = ரொம்ப பாவம் அவள்

இந்த வறுமையில், ஒரு மனைவி கணவனிடம் எப்படி நடந்து கொள்வாள் ?

"நாலு காசு சம்பாதிக்க வக்கில்லை, உனக்கு எல்லாம் ஒரு பொண்டாட்டி, புள்ள குட்டிக ..." என்று கோவித்து அவனை உசுப்பி ஏத்தி விட்டிருப்பாள்.

குசேலனின் மனைவி என்ன செய்தாள் தெரியுமா ?



1 comment:

  1. இந்த மாதிரி கதியிலே, 27 பிள்ளை எதற்கு?!?

    ReplyDelete