Monday, July 22, 2013

திருக்குறள் - நினைவு நல்லது வேண்டும்

திருக்குறள் - நினைவு நல்லது வேண்டும் 


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி 
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும் கூட மற்றவர்களுக்கு தீமை நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால், நினைத்தவனை அறக் கடவுள் தண்டிப்பார்.

விரிவுரை

மறந்தும் பிறன் கேடு  செய்யற்க என்று சொல்லவில்லை.   சூழுதல் என்றால் நினைத்தால். மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது.

மாறாக நினைத்தால், நினைத்தவனுக்கு கேட்டினை அறம் நினைக்கும்.

சற்று உன்னிப்பாக பார்த்தால் பிறருக்கு கேடு நினைத்தாலே போதும் , உடனே தண்டனைதான். கேடு செய்ய வேண்டும் என்று இல்லை.

நினைப்பது கூட வேண்டும் என்றே நினைக்கவேண்டும் என்று இல்லை. மறந்து போய் நினைத்தால் கூட போதும், உடனே தண்டனை தான்.

சில சமயம், சில பேர் மேல் கோபம் வரும். கோபத்தில் என்ன செய்கிறோம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. "அவன் நாசமாக போக வேண்டும், அவன் துன்பப் படவேண்டும் " என்று நாம் நினைக்கவும் கூட செய்யலாம். பின்னால் கோபம்   போன பின் நாம் அப்படி நினைத்ததை மறந்து கூட போவோம். ஆனால், அறம் மறக்காது. அப்படி மற்றவர்களுக்கு துன்பம் நினைத்தால்  அறம் நமக்கு துன்பம் நினைக்கும்.

சில சமயம் மற்றவர்கள் நமக்கு கெடுதல் செய்து இருப்பார்கள். வேண்டும் என்றே நமக்கு வரவேண்டிய  நல்லதை தடுத்து இருப்பார்கள். நமக்கு நட்டம் ஏற்படுத்தி இருப்பார்கள். நமக்கு துன்பம் செய்தவர்கள் , துன்பப் படவேண்டும் என்று நாம் நினைப்பது  இயற்கை.

கூடாது என்கிறார் வள்ளுவர்

மற்றவர்களுக்கு நாம் துன்பம் ஒரு போதும் நினைக்கக் கூடாது - அவர்கள் நமக்கு துன்பமே செய்து இருந்த போதும்.

பழிக்குப் பழி என்ற எண்ணம் அறவே கூடாது.

தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு துன்பம் நினைக்கக் கூடாது.

நினைவுகளுக்கு பெரிய ஆற்றல் உண்டு.

சட்டம் உங்களை தண்டிக்காமல் போகலாம். மற்றவர்களுக்குத் துன்பம் நினைப்பது  சட்டப் படி குற்றம் இல்லை. மற்றவர்களுக்கு துன்பம் செய்தால்தான் குற்றம்.

ஆனால், வள்ளுவரின் நீதி மன்றத்தில் நினைத்தாலே குற்றம்.

 மற்றவர்களுக்கு துன்பம் நினைக்கும் போது , நீங்கள் உங்களுக்கே துன்பம் விளைவித்துக்  கொள்கிறீர்கள்.

யோசிப்போம்.


1 comment:

  1. வள்ளுவரின் வழக்கு மன்றம் மட்டும் புழக்கத்தில் வந்தால் உலகமே எவ்வளவு சுபிட்சமாக இருக்கும்

    ReplyDelete