Monday, July 29, 2013

திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ?

திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ? 




தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

நான் என்பது என்ன ? என் உடலா ? அதில் உள்ள ஞாபகங்களா ? என் அறிவா ? என் அறிவீனமா ? 

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் இந்த வாழ்க்கையில்  - எது என்னை செலுத்துகிறது ? எதற்க்காக நான் காரியங்களை செய்கிறேன் ? எந்த விதிகளை நான் கடை பிடிக்கிறேன் ?

எனக்கு சொந்தமானது எவை ? நான் சம்பாதித்த பொருள்களா ? என் மனைவி, மக்களா ? என் நண்பர்களா ? என் உறவினர்களா ? எது எனது ?

இவற்றிற்கு எல்லாம் ஒரு விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

அந்த விடைகளை காலம் மாற்றிப் போடும். உங்களது என்று நீங்கள் நினைத்தவை உங்களதாக இல்லாமல் போகலாம். உங்கள் பிள்ளைகள் உங்களை விட்டு அவர்கள் வாழ்க்கையில் போய்  கொண்டிருக்கலாம். 

உங்கள் விடைகள் எல்லாம் ஒரு மாயையே. இன்றிருப்பது நாளை மாறலாம். மாறும். 

இறைவனின் குறிப்பை அறிந்து, அவன் தொண்டரோடு சேர்ந்து , பொய்யானவை எல்லாம் நீங்கி அவன் திருவடி சேரப் பாருங்கள் என்கிறார் மணிவாசகர். 

பொருள் 


தாமே தமக்குச் சுற்றமுந் = நமக்கு நாமே சொந்தக் காரர்கள். வேறு யாரும் நமக்கு கிடையாது

தாமே தமக்கு விதிவகையும் = நம் வாழ்க்கையை செலுத்தும் விதிவகைகளை நிர்ணயிப்பதும் நாம் தான். வேறு யாரும் அல்ல.


யாமார் = யாம் யார் ? நாம யார் ?

எமதார் = என்னுடையது எது ?

பாசமார் = பாசம் என்பது என்ன ?

என்ன மாயம் = இது எல்லாம் என்ன மாயம்

இவைபோகக் = இவை எல்லாம் போக

கோமான் = கோமகன், அரசன்

பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு = அவனுடைய குறிப்பே இலக்காகக் கொண்டு

போமா றமைமின் = போகும்படி அமையுங்கள்

பொய்நீக்கிப் = பொய் நீங்கி

புயங்கன் = பாம்பை தோளில் சுமந்தவன்

ஆள்வான் பொன்னடிக்கே. = எல்லோரையும் ஆள்பவன் பொன் போன்ற பாதங்களுக்கே


அங்க போறத விட்டுட்டு எங்கெங்கேயோ சுத்திக்  கொண்டு இருகிறீர்கள் என்கிறார் மணிவாசகர் 

2 comments:

  1. நாம் எல்லோருமே ஒரு அளவில் தனியர்கள்தாம் என்று எனக்குப் பலமுறை தோன்றி இருக்கிறது. இந்தப் பாடலைப் படித்தால் அதுதான் ஞாபகம் வருகிறது. இந்த மாதிரிக் கேள்விகளை இறைவன் அடி சேர்ந்தால் விட்டு மறந்துவிடலாம் என்கிறார்; ஆனால் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. மாணிக்க வாசகருக்கு கிடைத்து இருக்கிறது.

      உன் பற்று அன்றி ஒரு பற்றும் இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே என்றார் பட்டினத்தார்.

      முயன்று பார்பதில் தவறு ஒன்றும் இல்லையே.

      மேலும், அதைத் தவிர வேறு மார்க்கமும் இல்லை.

      Delete