Thursday, July 4, 2013

குழைத்த பத்து - நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு

குழைத்த பத்து - நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு 




நாம் செய்யும் நல்லது கெட்டதுகளை எல்லாம் அந்த ஆண்டவன் அறிவான். நாம் செய்யும் நல் வினை தீ வினைகளுக்கு ஏற்ப அவன் நமக்கு பலன் அளிப்பான்.

மாணிக்க வாசகர் பார்த்தார்....

முதலில் நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாது. தெரிந்தாலும், இந்த பாழாய் போன மனம் நல்லதை விடுத்து கெட்டதின் பின்னே போகிறது.

நல்லது எது, கெட்டது எது என்று அறிந்து, மனதை கட்டுப் படுத்தி அல்லவை விலக்கி நல்லதை மட்டும் செய்வது என்பது நடக்காத காரியம் என்று புரிந்து கொண்டார்.

எனவே, சிவனிடம் அவர் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்...."இறைவா, இந்த நல்லது கெட்டது கணக்கு எல்லாம் நீ தான் எழுதி வைத்து இருக்கிறாய். ஒண்ணு செய், நான் செய்த கெட்டதை எல்லாம் நல்லதுன்னு கணக்கை மாத்தி எழுதிரு. உன்னை யார் கேட்கப் போகிறார்கள். நீ எழுதினது தான் கணக்கு....அப்படி கணக்கை மாத்தி எழுதினதுனால உனக்கு ஒரு நட்டமும் இல்லை....எப்படி நம்ம ஐடியா "

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறார் மணிவாசகர்.

இறைவன் அருளைப் பெறுவது என்பது ஏதோ வாழ்வில் ஒரு முறை நடக்கும் செயல் அல்ல. ஏதோ வந்தாரு, அருள் தந்துவிட்டு போய் விட்டாரு என்று நடப்பது அல்ல. இறைவனின் அருள் மீண்டும் மீண்டும் வேண்டும். ஒரு தடவை அவன் அருள் கிடைத்தால் மீண்டும் மீண்டும் கிடைக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் அல்ல.

குழந்தை பசித்து தாயின் அருள் வேண்டி அழுகிறது. அவளும் பால் தந்து  குழந்தையின்  பசியைப் போக்குகிறாள். மீண்டும் பசி வரும். மற்றவள் தன் அருள்  நினைந்தே அழும் குழவி அது போல் ஆனேனே என்று குலசேகர ஆழ்வார் கூறியதைப் போல


பாடல்


ஒன்றும் போதா நாயேனை
    உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
    ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
    குணமாம் என்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய்
    எண்தோள் முக்கண் எம்மானே.  

பொருள்





ஒன்றும் போதா = போதா என்றால் போதாத. பத்தாத. நிறையாத. எதை  எடுத்தாலும் அதை விட கீழான

 நாயேனை = நாய் போல் கீழானவனை

உய்யக் கொண்ட = காப்பாற்றிய

 நின்கருணை = உன்னுடைய கருணை


இன்றே இன்றிப் போய்த்தோதான் = இன்று இல்லாமல் போய் விட்டதோ ?

ஏழை பங்கா = ஏழைகளின் பங்காளனே

எம்கோவே = என் அரசனே

குன்றே அனைய = மலை போல

குற்றங்கள்    குணமாம் என்றே நீகொண்டால் = நான் செய்யும் குற்றங்களை நீ குணமாக ஏற்றுக் கொண்டால்

என்றான் கெட்ட திரங்கிடாய் = எனக்கு ஒரு கெடுதலும் இருக்காது, எனவே நீ மனமிரங்கி

எண்தோள் முக்கண் எம்மானே.= எட்டு தோள்களையும், மூன்று கண்களையும் உள்ள  எம்பெருமானே
 

4 comments:

  1. "குணம்" என்றால், நல்லவை என்று பொருள் கொள்ளாமல், "இயற்கைக் குணம்" என்று பொருள் கொண்டால் நன்றாக இருக்கும். அதாவது, "நான் தவறு செய்தால், இது இவனது குணம், இவன் இப்படித்தான் செய்வான் என்று எண்ணி, அதைப் பொருட்படுத்தாதே விட்டுவிடு இறைவா" என்று பாடலின் பொருள் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. "குணம்" என்றால், "இயற்கைக் குணம்" என்று பொருள் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். "எதாவது தவறு செய்தால், இவன் குணமே இப்படித்தான் என்று விட்டுவிடு" என்று இறைவனை வேண்டுகிறார்.

    ReplyDelete
  3. எண் தோள் யாது?

    ReplyDelete
    Replies
    1. சூலமும் மழுவும் தாங்கித் தோள் இரு நான்கும் தோன்ற
      மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன,
      நீலன் நின்றுழியே நின்றான்; நிரந்தரம், கணங்களோடும்
      காலன் என்று ஒருவன், யாண்டும் பிரிந்திலன், பாசக்
      கையான்.

      எண் தோள், முக்கண்ணன்

      Delete