Tuesday, July 23, 2013

இராமாயணம் - இராவணின் கபட வேடம்

இராமாயணம் - இராவணின் கபட வேடம் 


மாய மான் பின்னால் அந்த மாயவன் போனான்.

போனவனை பின் தொடர்ந்து இளையவன் போனான்.

இருவரும் போன பின் சீதை தனித்து இருக்கிறாள்.

இராவணன்   வயதான முனிவர் போல் கபட வேடம் பூண்டு சீதை இருக்கும் இடம் வருகிறான்.

பாடல்

பூப் பொதி அவிழ்ந்தன 
     நடையன்; பூதலம் 
தீப் பொதிந்தாமென 
     மிதிக்கும் செய்கையன்; 
காப்பு அரு நடுக்குறும் 
     காலன், கையினன்; 
மூப்பு எனும் பருவமும் 
     முனிய முற்றினான்.

பொருள்

பூப் பொதி = பூவின் இதழ்கள்

அவிழ்ந்தன = மலர்வதைப் போல உள்ள

நடையன் = நடையுடன். சத்தமே இல்லாமல், மிக மிக மெதுவாக....ஒரு பூ மலர்வதைப் போல

பூதலம் = பூமி

தீப் பொதிந்தாமென = தீ  எரிந்தால்

மிதிக்கும் செய்கையன் =  அந்த சூட்டின் மேல் எப்படி பட்டும் படமாலும் நடப்பார்களோ அப்படி நடக்கும் செய்கையன்.


காப்பு அரு = காத்துக் கொள்ள அருமையான, அல்லது கடினமான

 நடுக்குறும் = நடுக்கம் கொண்ட

காலன், கையினன் = காலும் கையும்  கொண்டு. அதாவது காலும் கையும் நடுங்குகிறது. தடுத்து அந்த நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை


மூப்பு எனும் பருவமும் = வயதான  பருவத்தோடு

முனிய = கோபப்படும்படி. வயதானவர்களுக்கே அவர்களின் முதுமையை பற்றி கோவம் வரும். கண் தெரியாமல், காது சரியாக கேட்காமல், எல்லாவற்றிற்கும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு....

முற்றினான் = .அப்படிப்பட்ட முதுமையிலும் பழுத்த, முற்றிய உருவினனாய் வந்தான்

இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

புல்லின் மேல் சறுக்கு விளையாடும் அந்த பனித்துளியில் என்ன இருக்கிறது...

தூக்கம் கலையாத காலைப் பொழுதில் எங்கேயோ கூவும் குயிலின் அந்த ஒத்தை  ஒலியில்என்ன இருக்கிறது ?

வெட்கப்படும் மனைவியின் கன்னச் சிவப்பில் என்ன இருக்கிறது ?

தோளில்தூங்கிப் போகும் குழந்தை, அதில் என்ன இருக்கிறது....

ஒரு வார்த்தை பேசாமல் ஒரு மணி நேரம் ஒன்றாய் நடக்கும் அந்த நட்பு, அதில் என்ன இருக்கிறது ....

இருப்பவைகளுக்கு விலை வைத்து விடலாம்...இல்லாததற்கு என்ன விலை சொல்லுவது ....

இன்று இல்லாவிட்டாலும், பின்னொரு நாள் இந்த கவிதைகளை படித்து பாருங்கள்....எங்கோ பெய்த  மழையின் மண் வாசம் இங்கே வருவதைப் போல காலம் கடந்தும் இந்த கவிதை   வாசனை உங்கள் நாசி  வருடிப் போகலாம்....

3 comments:

  1. இந்த பாடலில் என்ன இல்லை? அழகு இருக்கிறது, சந்தம் இருக்கிறது, கவி நயம் இருக்கிறது, அதற்கு மேல் உங்களின் விளக்கம் அருமையாக இருக்கிறது. என்றோ இல்லை என்றும் அனுபவிக்கும் அழகு உள்ள பாடல்களை கம்பனை தவிர யாரால் எழுத முடியும்?
    மெதுவாக நடப்பதை இதை விட நல்ல உவமை கொண்டு விளக்க முடியுமா என்ன ?

    நன்றி
    Meenakshi Vidyasagar

    ReplyDelete
  2. என்ன அருமையான பாடல்...! சும்மா நாமே அந்த இடத்தில் இருந்து நேரே பார்த்தது போல உணர வைக்கிறது. தூளான உவமைகள். அற்புதமான பாடல்.

    இதை எங்களுக்குப் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  3. எவ்வளவு கொடியவனானாலும், தவறு செய்யப் போகும்போது கை கால் நடுங்குகிறது! (அல்லது, முதியவனைப் போல் வேடம் போட்டதாலோ?)

    ReplyDelete