Friday, July 26, 2013

இராமாயணம் - கண்ணின் மாலை

இராமாயணம் - கண்ணின் மாலை 


முதலிலேயே பாடலை சொல்லி விடுகிறேன். படியுங்கள். படித்து இன்புறுங்கள்.  நான் என்னதான் விளக்கம் எழுதினாலும் கம்பனின் பாடலுக்கு உறை போடக் காணாது என் உரை.


பாடல்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே

மயில் போல் இருக்கும் சீதையை காண்கிறான் இராவணன். அவன் கண்கள் அவள் அழகை இரசிக்கின்றன. நம்மை மாதிரி இரண்டு கண் அல்ல அவனுக்கு. இருபது கண்கள். இருபது கண்களும் கொள்ளாத அழகு.

அவன் கண்களுக்கு ஒரு மகிழ்ச்சி.

அவளை அங்கே பார்க்கிறான், இங்கே பார்க்கிறான், மேலே பார்க்கிறான், கீழே பார்க்கிறான்.

அந்த சந்தோஷத்தை வர்ணிக்க ஒரு உதாரணம் தேடினான் கம்பன்.

பெரிய சுனை. அதில் நிறைய பூக்கள். அந்த பூக்களில் நிறைய தேன் இருக்கிறது. அவற்றை கண்டால் தேனீக்களுக்கு எப்படி சந்தோஷம் இருக்குமோ அப்படி  அவன் கண்கள் சந்தோஷப் பட்டன என்றான்.

பூ போன்ற ஜானகி. தேன் நிறைந்த பூ போன்ற ஜானகி.

அந்த பூக்களை கண்டு சந்தோஷத்தில் ரீங்காரமிடும் கரிய வேண்டுகள் போல இராவணின்  கண்கள். 20 கண்கள். வண்டுகள் போல அங்கும் இங்கும் அலைகின்றன.

ஒரு பூவை விட்டு இன்னொரு பூவுக்கு தாவுவது போல சீதையின் ஒரு அழகை விட்டு இன்னொரு   தாவுகிறது அவன் கண்கள்.

பார்த்தான் கம்பன், நல்ல உவமைதான், ஆனால் அவன் கண்களில் உள்ள சந்தோசத்தைப் பார்த்தால் அந்தத் தேன் கண்ட வண்டுகளை விட    அதிகமான அதிகமான  சந்தோஷம் உள்ளவை போல இருக்கிறதே  ? உலகிலேயே அதிக பட்ச  சந்தோஷம் உள்ளது எது, அதை அவனின் கண்களுக்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அட, இங்கேயே இருக்கே....இதை விட்டு விட்டு எங்கு எல்லாமோ எதுக்கு அலைய வேண்டும்......

சீதையின் அழகை கண்டு சந்தோஷப் பட்ட இராவணின் மனம் போல அவன் கண்கள் மகிழ்ச்சியில் துள்ளின  என்றான்.  அவன் மனதை விட மகிழ்ச்சியான ஒன்று இருக்க முடியாது.

அப்படி மகிழ்ச்சியில் அவள் மேனி எங்கும் ஓடிய அவன் கண்கள் அவளுக்கு கண்ணாலேயே மாலை அணிவித்தது   போல இருந்தது.

இருபது விழிகளால்  மாலை இட்டான்

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே


பொருள் 



புன மயில் = தினை புனத்தில் உள்ள மயில்

சாயல்தன் எழிலில் = சாயலை கொண்ட அழகான சீதையின் அழகில்

 பூ நறைச் = பூவில் உள்ள மது

சுனை மடுத்து = சுனையில் சென்று

உண்டு = தேனை உண்டு

இசை முரலும் = ரீங்காரமிடும்

தும்பியின் - வண்டின்

இனம் எனக் = ஒரு வண்டு அல்ல, வண்டின் இனம். இருபது கண்கள் பெரிய வண்டின் கூட்டம் போல இருக்கிறது

களித்துளது = மகிழ்ந்து இருக்கிறது

என்பது என்? = அப்படின்னு ஏன் சொல்லணும் ?

அவன் = இராவணன்

மனம் எனக் களித்தது = மனம் போல களித்தது

கண்ணின் மாலையே = அவன் கண்ணால் அவளுக்கு இட்ட மாலை

மனச என்னவோ பண்ணுது இந்த பாட்டை படித்த பின்....



1 comment:

  1. இந்த பாடல்களை எல்லாம் நாங்கள் படித்து இன்புற செய்யும் உங்களுக்கு நன்றி. நன்றி.

    ReplyDelete