Saturday, July 6, 2013

ஜடாயு - பேதாய் பிழை செய்தனை

ஜடாயு - பேதாய் பிழை செய்தனை 


ஜடாயு மேலும் சொல்லுவார் ....

பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின் 
மாதா அனையாளை  மனக்கொடு, நீ 
யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்? 
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ?


இராவணா, பேதையே நீ பிழை செய்து விட்டாய். இந்த உலகுக்கு எல்லாம் தாய் போன்றவளை, நீ உன் மனத்தில் என்ன என்று நினைத்தாய் ? எண்ணம் இல்லாதவனே, உனக்கு இனிமேல் யார் ஆதாரம் ?


பேதாய்! = பேதையே

பிழை செய்தனை;= பிழை செய்து விட்டாய் 

பேர் உலகின் = இந்த பெரிய உலகின்

மாதா அனையாளை = தாய் போன்றவளை 

மனக்கொடு, நீ யாது ஆக நினைத்தனை? = உன் கொடிய மனத்தில் யார் என்று நினைத்தாய் ?

எண்ணம் இலாய்? = (நல்ல ) எண்ணம் இல்லாதவனே

ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? = உனக்கு இனிமேல் யார் ஆதாரம் ? (ஒருவரும் இல்லை)

அதாவது, இராவணன் தவறு மேல் தவறு செய்து கொண்டு போகிறான். திருமாலால் தண்டிக்கப்  படப் போகிறான். அப்போது அவனுக்காக பரிந்து பேசி, தண்டணையை குறைப்பவள் திருமகள். பிள்ளை தவறு செய்தால் அப்பா கண்டிப்பார் ...அடிக்க கை ஓங்குவார்...அம்மா வந்து தடுத்து...."பாவம், இந்த ஒரு தடவை  விட்டுருங்க...இனிமேல் அப்படி செய்ய மாட்டான் " என்று பிள்ளைக்காக  பரிந்து பேசுவாள் தாய்.


அது போல் இராவணன் தவறே செய்து இருந்தாலும் உலகுக்கு எல்லாம் தாயான அவள்   அவனுக்காகவும் பரிந்து பேசி இருக்கலாம்....அதையும் தடுத்து, அவளையே  தூக்கிக் கொண்டு போகிறாயே இராவணா இனி உனக்கு என்ன  ஆதாரம் இருக்கிறது ? யார் உன்னை காப்பாற்றப் போகிறார்கள் ? என்றார் ஜடாயு.




No comments:

Post a Comment