Thursday, July 11, 2013

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும்

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும் 


நிறைய செல்வம் இருக்கும். ஆனால், பிறருக்கு உதவி செய்யும் மனம் இருக்காது.

செல்வம் குறைவாக இருந்தால் கூட, சில பேருக்கு மற்றவர்களுக்கு உதவும் ஈர உள்ளம் இருக்கும்.

அது எப்படி இருக்கிறது என்றால்

கடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், கரையில் சின்ன சின்ன ஊற்று இருக்கும். அந்த ஊற்று, தன் நீரின் மூலம் மக்கள் தாகம் தீர்க்கும்

பாடல்


  பெருகிய செல்வ ருள்ளும் 
          பயனிலார் உளராற் பேணி 
     அருகிய செல்வ ருள்ளும் 
          பயனுளார் உளரென் றாய்ந்து 
     பெரியவர் சொலுஞ்சொல் தேற்றும் 
          பெரியநீர்க் கடலும் ஆங்காங்
     குரியவெண் மணற்சிற் றூறற்
          கேணியும் உரிய நீரால்.

பொருள் 


பெருகிய செல்வ ருள்ளும் = பெருகி வளர்ந்த செல்வர்கள் இடையே

பயனிலார் உளராற் = மற்றவர்களுக்குப் பயன் படாத செல்வர்களும் உண்டு

 பேணி = காத்து

அருகிய செல்வ ருள்ளும் = அருகிய என்றால் அருமையான, குறைந்த. குறைந்த செல்வர், அதாவது ஏழைகள் இடையே கூட

பயனுளார் = பயன் உள்ளவர்கள்

உளரென் றாய்ந்து = இருப்பார்கள் என்று ஆராய்ந்து

பெரியவர் சொலுஞ்சொல் தேற்றும் = என்று பெரியவர்கள் சொல்லும் சொல்லை அறிந்து

பெரியநீர்க் கடலும் = பெரிய நீர் பரப்பை கொண்ட கடலும்

ஆங்காங் குரிய = அங்கே உள்ள

வெண் மணற்சிற் றூறற் = வெண் மணலில் உள்ள சின்ன ஊற்றில்

கேணியும் உரிய நீரால் = உள்ள கேணியில் உள்ள நீரை மற்றவர்களுக்கு உரியதாய் ஆக்கும்


1 comment:

  1. அருமையான கருத்து, அருமையான உவமை, அருமையான பாடல்! நன்றி.

    ReplyDelete