Friday, August 16, 2013

அபிராமி அந்தாதி - அவளை வணங்கினால் கிடைக்காதது

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

அபிராமியை வணங்கினால் எல்லாம் கிடைக்கும் ஆனால் இரண்டு விஷயம்  .கிடைக்காமல் போகும். அபிராமியை வணங்காதவர்களுக்கு கிடைக்கும், ஆனால் அவளை வணங்குபவர்களுக்கு கிடைக்காது.

அவை என்ன ?

ஒன்று, மறு பிறவி

இரண்டு, இன்னொரு தாயார்

மீண்டும் பிற்பதாய் இருந்தால் தானே இன்னொரு தாய் வேண்டும். மறு பிறவியே இல்லை என்றால் எதற்கு இன்னொரு தாய் ?

இந்த இரண்டும் அபிராமியின் பக்தர்களுக்கு கிடைக்காது. மத்தது எல்லாம் கிடைக்கும்.

எல்லாம் கிடைக்கும் என்றால், என்ன எல்லாம் கிடைக்கும் ?

ரொம்ப ஒண்ணும் இல்லை - கற்பக மரத்தின் நிழலில் தங்கும் நிலை கிடைக்கும். கற்பக மரம்  நினைப்பதை எல்லாம் தரும். எனவே, கற்பக மரத்தின் நிழலில் தங்குவது என்றால் நினைப்பது எல்லாம்   நடக்கும்.

 சரி,அந்த கற்பக மரத்தின் நிழலில் எவ்வளவு நாள் தங்குவது ? ஏதோ கொஞ்ச  காலம்  தங்கி பின் அங்கிருந்து போய் விட வேண்டுமா ?

கற்பக மரம் வானுலகில்  இருக்கிறது.அங்கு போன பின், மீண்டும் பிறவியே கிடையாது . நிரந்தரமாய் அங்கேயே இருக்க வேண்டியதுதான். மறு பிறவியும் கிடையாது, இன்னொரு தாயாரும் கிடையாது.

யாருக்குக் கிடைக்கும் ?

 அபிராமிக்கு பூஜை பண்ணுபவர்களுக்கா ? அவளை போற்றி பாடுபவர்களுக்கா ?

இல்லை.

பின் ?

கூந்தலில் நிறைய பூக்களை சூடியிருக்கும் அபிராமியின் அழகை மனதில் நினைத்துப் பார்பவர்களுக்கு, அது எல்லாம் கிடைக்கும். சும்மா, அந்த வடிவழகை நினைத்துக் கொண்டே இருந்தால் போதும்....

பொருள்




தங்குவர் = தங்கி இருப்பார்கள்

கற்பகத் தாருவின் நீழலில் = கற்பக மரத்தின் நிழலில்

தாயர் இன்றி = மீண்டு வந்து இங்கு பிறக்க தாயார் இல்லாமல்

மங்குவர் = வருந்துவார்கள்

மண்ணில் வழுவாய் பிறவியை = மீண்டும் வந்து பிறக்க மாட்டார்கள்

 மால் வரையும் = பெரிய மலைகளையும்

பொங்கு உவர் ஆழியும் = பொங்கி வரும் உப்பு கடல்களையும்

ஈரேழ் புவனமும் = ஈரேழு பதினான்கு உலகங்களையும்

பூத்த = படைத்த

உந்திக் = வயிற்றை உடையவளையும்

கொங்கிவர் பூங்குழலாள் = மணம் வீசும் மலர்களை தன் தலையில் சூடிய (அபிராமியின் )

திருமேனி = அழகிய

குறித்தவரே = மனதில் நினைப்பார்களே, தியானிப்பவர்களே

நினைத்துப் பாருங்கள்.

1 comment:

  1. ஆஹா, இந்த மாதிரி பக்தர்களுக்கு என்ன கிடைக்காது என்ற எதிர்மறையான சூட்சுமத்தை வைத்து ஒரு பாடலா? அருமை.

    ReplyDelete