Saturday, August 3, 2013

திருக்குறள் - சிறியோரை சேராமை

திருக்குறள் - சிறியோரை சேராமை 


சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

சீர் பிரித்த பின்

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாகச் சூழுந்து விடும்

பொருள்

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். இது மு. வரதராசனாரின் உரை.

விரிவுரை

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

பெரியவர்கள், சிற்றனத்தை சேர்ந்தவர்களை கண்டால் அஞ்சுவார்கள். சிறியவர்களோ ஒருவரோடு ஒருவர் உறவாக  வாழ்வார்கள்.

சரி. சிற்றினம் என்றால் யார் ?

அறிவில் குறைந்தவர்களா ? ஆற்றலில் குறைந்தவர்களா ? பண்பாட்டு இல்லாதவர்களா ? செல்வத்தில் குறைந்தவர்களா ?

சிற்றினம் என்றால் யார் ?

அறிவை திரித்து, இருமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்கள் என்கிறார் பரிமேல் அழகர்.

நம் அறிவை குழப்புபவர்கள் சிற்றினத்தை சேர்ந்தவர்கள். தெளிவு இல்லாதவர்கள். அரை  குறை அறிவு  உள்ளவர்கள். ஒன்றும் தெளிவாக தெரியாவிட்டாலும்  எல்லாம் தெரிந்த மாதிரி  பேசுபவர்கள்.

இருமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்கள் என்றால் என்ன ?

இந்த  வாழ்விலும், இறப்பிற்கு பின் மறு வாழ்விலும் நமக்கு ஒரு   நன்மை இல்லாமல்   செய்பவர்கள் சிற்றினத்தை சேர்ந்தவர்கள்.

யோசித்துப் பாருங்கள். நம்மை குழப்பி, நமக்கு ஒரு விதத்திலும் நன்மை செய்யாதவர்களின் கூட்டு நமக்குத் தேவையா ?

குறள்  இன்னும் முடியவில்லை.

இந்த சிற்றினத்தை சேர்ந்தவர்களை கண்டால் பெரியவர்கள் அஞ்சுவார்கள் .

அதாவது, சும்மா ஒதுங்கிப் போனால் போதாது. அஞ்சி ஒதுங்க வேண்டும். அவர்களைப்  பார்த்தால்  பயப்படவேண்டும். எங்கே வந்து நம்மோடு ஒட்டிக் கொள்வானோ  அல்லது கொள்வாளோ என்று ஒரு பயம் இருக்க வேண்டும்.

வந்தால் வரட்டுமே, என்னை என்ன செய்ய முடியும் என்று தைரியமாக இருக்கக் கூடாது.  நம்மை கெடுத்து குட்டிச் சுவராக ஆக்கி விடுவார்கள்.

நாம் அவர்களோடு உறவாக இருப்போம். ஆனால் நாம் தப்பு தண்டா எதுவும் செய்யாமல்  இருந்தால் போதாதா என்று நினைக்கக் கூடாது. சிற்றினத்தை சேர்ந்தவர்களோடு  உறவாக இருப்பதே நம்மையும் அவர்களில் ஒருவனாக உலகம்  நினைக்கத் தலைப்படும். நாம் தவறே செய்யா விட்டாலும், நம் மீது பழி வந்து சேரும்.

எனவே, பெரியவர்கள், சிற்றனத்தை சேர்ந்தவர்களை கண்டால்  அஞ்சுவர்.

குறள்  இன்னும் முடியவில்லை.

பெரியவர்கள் அஞ்சுவார்கள். ஆனால் இந்த சிற்றினத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களே  அவர்கள் ஒருவரோடு ஒருவர் உறவினர் போல் ஒன்றாக வாழ்வார்கள்.

கெட்டவர்கள் ஒரு முறை பழக்கம் கொண்டு விட்டால் பிடித்துக் கொள்வார்கள். ரொம்ப நாள் பழகிய உறவினர்கள் போல் நம்மை விட மாட்டார்கள்.

எனவே, சிற்றினம் சேர்ந்தவர்களை கண்டால் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் உங்களோடு  ஏற்கனவே ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தால், வெட்டி விட  முயற்சி செய்யுங்கள்.

சிற்றினம் என்றால் திருடன், கொள்ளைக்காரன் என்று இல்லை, தெளிந்த அறிவு இல்லாதவர்கள், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை செய்யாதவர்கள்.

இன்னும் கூட முடியவில்லை இந்த குறள் ...இருப்பினும் விரிவஞ்சி இத்தோடு முடித்துக் கொள்கிறேன்....


6 comments:

  1. பெரியவர்கள் இது மாதிரி அஞ்சி ஒதுங்கி விட்டால் சிறியவர்களை திருத்துவது யார்? don't they have any moral responsibility to correct them?

    ReplyDelete
    Replies
    1. எந்த கெட்டவன் , நல்லவர்கள் சொன்னதை கேட்டு திருந்தி இருக்கிறான் ?

      விபீஷணன் சொல்லி இராவணன் கேட்டானா ?

      விதுரரும் , பீஷ்மரும், துரோணரும் சொல்லி துரியோதனன் கேட்டானா ?

      பிரகலாதன் சொல்லி இரணியன் கேட்டானா ?

      முருகனும், வீரபாகுவும் சொல்லி சூரபத்மன் கேட்டானா ?

      ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பெரியவர்கள் அறம் சொல்லிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். நாம் கேட்கிறோமா ?

      தாடகை மேல் இராமன் விட்ட அம்பு "அறியா புல்லர்க்கு நல்லோர் சொன்ன சொல் போல் புறம் போயிற்று " என்றான் கம்பன்.

      கொடிறும் பேதையும் கொண்டது விடா.

      சிறியவர்கள் சொல்லிக் கேட்க மாட்டார்கள். பட்டுத் திருந்தினால் உண்டு.

      கொலையில் கொடியாரை வேந்தறுத்தல் என்றான் வள்ளுவன். கொலையில் கொடியாரை வேந்தன் திருத்துதல் என்று வள்ளுவன் சொல்லவில்லை.

      Delete
  2. But they all have tried, and emphasized the good and bad.if they just have not tried then we wont be having all theses epics by now.

    ReplyDelete
    Replies
    1. All these epics tell us one thing. Bad fellows never listen to good advice. It is upto us to learn the lesson from these epics or ignore them and try to correct the bad boys.

      Valluvar says it is a waste of time.

      வம்பு செய் தீங்கினர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி என்று தமிழ் தமிழ் சொல்கிறது. அப்புறம் உன் இஷ்டம்

      Delete
  3. புவனா கேட்டது நல்ல கேள்வி. சிறையில் இருப்பவர்கள் முதலானோரை முன்னேற்றும் பல முயற்சிகள் வெற்றி பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. சில நேரங்களில் நமது மன நிம்மதிக்காகக் கூட வம்பு செய் தீங்கினர் கண்ணில் படாத தூரத்து நீங்குவது நல்லதாகத்தான் படுகிறது. அதிலும் குறிப்பாக நண்பர்களாக நினைத்து பழகியவர்கள் துரோகம் செய்யும் போது.....வாழ்க்கையில் சமீபத்திய அனுபவம்!

    ReplyDelete