Tuesday, August 6, 2013

இராமாயணம் - உடலும் மிகை

இராமாயணம் - உடலும் மிகை 




வேதமும் வேதியர் அருளும் வெ·கலா
சேதன மன் உயிர் தின்னும், தீவினைப்
பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
ஏது என்?-உடலமும் மிகை என்று எண்ணுவீர்!

சந்நியாசி வேடத்தில்  இராவணன், அவன் பெருமையை அடுக்கிக் கொண்டே போகிறான். எல்லாம் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட இராவணன் வாழும் ஊரில்  வருகிறேன்  என்று சீதையிடம்  சொல்கிறான்.

இதையெல்லாம் கேட்டு சீதை மயங்குவாள் என்பது அவன் எண்ணம்.

ஆனால் சீதை கேட்கிறாள்.....

"தங்கள் உடலை கூட சுமை என்று நினைக்கும் முனிவரே, வேதத்தையும், வேதம் பயின்ற முனிவர்களையும் விரும்பாமல், உயிர்களை தின்னும் அந்த ஊரில் நீங்கள் ஏன் போய் இருந்தீர்கள் ?" என்று.

இவ்வளவு பெரிய அமைதியான கானகம் இருக்கிறது. இதை விட்டுவிட்டு அரக்கர்கள் வாழும் அந்த நகரத்திற்கு எதற்கு போனீர்கள் என்பது அவள் கேள்வி.

அரக்கர்களுக்கு (=கெட்டவர்களுக்கு ) நல்லதும் பிடிக்காது, நல்லவர்களையும் பிடிக்காது. அவர்கள் மனிதர்களை தின்பவர்கள்.

முனிவர்களுக்கு ஒரு விதி சொல்கிறான் கம்பன். அவர்கள் இந்த உடலை கூட சுமையாக   நினைப்பார்களாம். அவ்வளவு மெலிந்த உடலே சுமை என்று நினைக்கிறார்கள். நம்ம உடம்பை என்ன என்று சொல்லுவது?

உடம்பு சுமை என்றால் எதற்கு சுமை ? மனதிற்கா? உயிருக்கா ?

போற போக்கில் கொளுத்தி போட்டு விட்டுப் போகிறான் கம்பன். யோசியுங்கள் என்று.

அறிவும், தவமும்  வளர வளர உடல்  மெலியும். சாப்பாட்டில் கவனம் குறையும். புலன் இன்பங்கள் மட்டுப் படும்.

உணவு மருந்தாகவிட்டால், மருந்து உணவாகும் என்று அவர்கள்  அறிந்திருக்கிறார்கள்.

பொருள்



வேதமும் = வேதமும்

வேதியர் அருளும் = வேதம் பயின்ற வேதியர்களின் அருளும்

வெ·கலா = விரும்பாத

சேதன = சேதனம் என்றால் வெட்டுதல். இங்கே பகுத்தல். பகுத்து அறிதல். பகுத்தறிவு உள்ள (மனிதர்களை) 

மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை

தின்னும் = தின்னும்

தீவினைப் =  தீய செயல்கள் செய்யும்

பாதக அரக்கர்தம் பதியின் = பாதகங்கள், பாவங்கள் செய்யும் அரக்கர்கள் வாழும் அந்த ஊரில்

வைகுதற்கு ஏது என்? = ஏன் தங்கினீர்கள் ?

உடலமும் மிகை என்று எண்ணுவீர்! =  உடலைக் கூட தேவை இல்லாத சுமை, அதிகம் என்று என்னும் முனிவராகிய நீங்கள் ?

உடலே தேவையில்லாத சுமை என்றால் பின் எதுதான்  தேவையானது ?  உடல் சார்ந்த    சுகங்கள், உடல் சார்ந்த உறவுகள் இவையும் தேவை இல்லாமல் போகும்தானே.....





1 comment:

  1. "உடலும் மிகை" - சூப்பர்!

    இப்படிக் கேட்பதன் மூலம், இராவணன் ஒரு அரக்கன் என்பது தனக்குத் தெரியும் என்கிறாள் சீதை. நீங்கள் அனாவசியமாக இராவணன் புகழ் பாட வேண்டாம் என்கிறாள்.

    ReplyDelete