Thursday, August 8, 2013

இராமாயணம் - அற நெறி நினைக்கிலாதவர்

இராமாயணம் - அற நெறி நினைக்கிலாதவர் 




வனத்திடை மாதவர் 
     மருங்கு வைகலிர்; 
புனல் திரு நாட்டிடைப் 
     புனிதர் ஊர் புக 
நினைத்திலிர்; அற 
     நெறி நினைக்கிலாதவர் 
இனத்திடை வைகினிர்; என் 
     செய்தீர்!' என்றாள்.

சீதை மேலும் கபட வேடத்தில் இருக்கும் இராவணனிடம் வினவுகிறாள்....

தவம் செய்யும் முனிவர்கள் வாழும் கானகத்தில்   வாழவில்லை. சரி காடுதான் வேண்டாம் என்றால், நீர் நிரம்பிய, புனிதர்கள் நிரம்பிய ஊர்களிலாவது வாழ்ந்து  இருக்கலாம்.அதை எல்லாம் விட்டு விட்டு 
அற நெறியை பற்றி நினைக்கக் கூட செய்யாத அரக்கர்கள் வாழும் இடத்திற்குச் சென்றீர், இது என்ன செயல் என்று  வினவினாள் .

பொருள்



வனத்திடை = கானகத்தில்

 மாதவர் = பெரிய தவம் செய்யும் முனிவர்கள்

மருங்கு வைகலிர்= அவர்களோடு சேர்ந்து இருக்க நினைக்கவில்லை 

புனல் = நீர் நிரம்பிய 

திரு நாட்டிடைப்  = சிறந்த நாட்டில்

புனிதர் ஊர் புக =நல்லவர்கள் வாழும் ஊரில் சென்று வாழ 

நினைத்திலிர் = நினைக்கவில்லை

அற நெறி நினைக்கிலாதவர் = அற  நெறிகளை பற்றி நினைக்கக் கூட செய்யாத

இனத்திடை வைகினிர் = அது போன்ற இனத்தவர்கள் (அரக்கர்கள்) இடையில் சென்று இருந்தீர்


என் செய்தீர்!' என்றாள். = என்ன காரியம் செய்தீர்கள் என்றாள்

நல்லவர்களோடு இருக்க  வேண்டும். தீயவர்களோடு இருக்கக் கூடாது என்ற  கருத்தில்.

ஏன், நல்லவர்கள் தீயவர்களோடு கலந்து பேசி அவர்களை நல்லவர்களாக ஆக்கக் கூடாதா ? பின் கெட்டவர்கள் எப்படிதான் நல்லவர்களாக  ஆவது என்று கம்பனுக்குத்  தோன்றவில்லை.நம்மில் சில பேருக்கு அப்படித்  தோன்றலாம்.

ஹ்ம்ம்...என்ன செய்வது....

3 comments:

  1. அந்த காலத்தில் டிவி, ரேடியோ, செய்தி தாள்கள், நெட் இல்லாத சமயத்தில், அயோத்தியில் இருந்த சீதைக்கு இலங்கை நாட்டையும், அதில் வாழ்ந்த மனிதர்கள் இயல்புகளும் எப்படி தெரிந்திருக்கும்?
    more than that i never know that sita had conversed with raavan before abduction. this is the first time im hearing about this. thanks for bringing about all these unknown poems in your blog.

    ReplyDelete
  2. அங்குலி மாலி என்று ஒரு திருடன், கொள்ளைக்காரன் இருந்தான். நாரதர் என்ற நல்லவர ஒரு தடவை அவனை சந்தித்து ஒரு கேள்வி கேட்டார். நமக்கு வால்மீகி ராமாயணம் என்ற ஒரு சிறந்த காப்பியமே கிடைத்தது. suppose நாரதர் தீயவர்களோடு சேரகூடாது என்று ஓடி போயிருந்தால் ?

    நல்லவர்களில் கெ ட்டவர்களும் இருக்கிறார்கள் கேட்டவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். ராவணன் எவ்வளவோ நல்லவந்தான்.ஏதோ ஒரு தப்பு பண்ணி விட்டான். யாராவது நல்லவர்கள் திருத்தி இருக்கலாமோ என்று நினைப்பது தவறா?

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவர் திருக்குறள் எழுதியது நாரதர் போன்ற பெரிய முனிவர்களுக்கு அல்ல. உனக்கு பெருமை வேண்டும் என்றால் சிற்றினத்தை விலக்கு என்கிறார். இல்லை, நான் சிற்றினத்தை திருத்தப் போகிறேன் நாரதர் மாதிரி என்று சொன்னால், என்ன சொல்லுவது ?

      முயன்று பார். வள்ளுவரின் மகத்துவம் புரியலாம்.

      நல்லது சொன்னால் இங்கே யார் கேட்கிறார்கள்.

      Delete