Sunday, August 25, 2013

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே 




ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம் 
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம் 
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் 
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.

சூர பத்மனை அழிக்க ஒரு பிள்ளை  வேண்டும்.அதை  சிவன்தான் உருவாக்க வேண்டும். சிவனோ தவத்தில்  இருக்கிறான். அந்த தவத்தை கலைக்க வேண்டும்.

என்ன  செய்வது என்று யோசித்த தேவர்கள், சிவனின் தவத்தை கலைக்க  காமனை அனுப்பினார்கள்.

காமனும்  சென்றான்.சிவன் நெற்றிக் கண்ணால்  வந்தான்.

சிவன் காமத்தை  கடந்தவன்.

பிள்ளை வேண்டும் என்றால் காமம் வேண்டும். என்ன செய்வது. ?

அபிராமி, சிவனுக்கு முருகனை படைக்கும் வல்லமையை தந்தாள் என்று பட்டர்  நாசூக்காக  சொல்கிறார்.

அகிலமும், வானும்,பூமியும் அறிய காமனை எரித்த சிவனுக்கு முருகனை உருவாக்கும்  சக்தி தந்த உன் வல்லமையே வல்லமை என்று அபிராமியை துதிக்கிறார்.

அவளும் காமத்தை ஆட்சி  செய்யும் காமாட்சி தான்...



பொருள்


ககனமும் = அண்ட சராசரங்களும்

வானும் = வானமும்

புவனமும் = இந்த பூமியும்

காண = காணும்படி

விற் காமன் = வில் பிடித்த மன்மதனின்

அங்கம் = அங்கங்களை

தகனம் முன் செய்த = முன்பு தகனம் செய்த

தவம் பெருமாற்கு = தவம்  கொண்டிருந்த பெருமானான சிவனுக்கு

தடக்கையும் =  தடக் கைகளும்

செம் முகனும் = செம்மையான முகங்களும்

முந்நான்கு = பன்னிரண்டு (தடக் கைகள் )

இருமூன்று = ஆறு (முகங்கள்)

எனத் தோன்றிய = என்று தொன்றிய

மூதறிவின் = முதிர்ந்த அறிவின்

மகனும் உண்டாயது அன்றோ? = பிள்ளை உண்டானது உண்டானது அன்றோ

வல்லி = வல்லி , கள்ளி

நீ செய்த வல்லபமே = உன்னுடைய திறமையான காரியமே

காமத்தை வென்ற காமேஸ்வரனுக்கும் அன்பை சுரக்க வைத்து, பிள்ளை உருவாக  வழி செய்தாள் என்றால் என்னே அவள் அன்பின் எல்லை.

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதியை ஒவ்வொரு வார்த்தையாக  படிக்கக் கூடாது....அதை முழுமையாக உணர வேண்டும்.     பட்டரின் மனதில் இருந்து அதைப் படிக்க வேண்டும்



2 comments:

  1. சுவாரசியமான கருத்து.

    பிள்ளை உண்டாகக் காமம் எதற்கு? (இதற்கு மேலும் எழுத முடியாது. புரிந்துகொள்ளுங்கள்.)

    ReplyDelete
  2. //நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதியை ஒவ்வொரு வார்த்தையாக படிக்கக் கூடாது....அதை முழுமையாக உணர வேண்டும். பட்டரின் மனதில் இருந்து அதைப் படிக்க வேண்டும்//

    ஆமாம்! மிகவும் உண்மை.

    ReplyDelete