Sunday, August 25, 2013

நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை

நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை 




ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப .

கல்வியை எப்படி கற்றுத் தர வேண்டும் என்று சொல்கிறார் பவணந்தியார்.

கல்வி கற்றுத் தரும் ஆசிரியனின் தகுதி, சொல்லிக் கொடுக்கும் இடம், மாணவனின் அறிவுத் திறம் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது கல்வி கற்றுத் தரும் முறை.

முதலில் சீர் பிரிப்போம்.


ஈதல் இயல்பு இயம்பும் காலை 
காலமும் இடமும் வால் இதனை நோக்கி 
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி 
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைந்து 
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து 
கொள்வான் கொள் வகை அறிந்து அவன் உள்ளம் கொள்ள 
கோட்டம் இல் மனதில் நூல் கொடுத்தல் என்ப 

பொருள்


ஈதல் = கல்வி கற்றுத் தருதல்  என்பது தானம் தருவது போன்றது. அது வியாபாரம்  அல்ல. வேண்டுபவர்களுக்கு தானமாகக் கொடுப்பது ஈதல் எனப்படும்.

இயல்பு = அது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாக இருக்க வேண்டும்.

இயம்பும் காலை  = எப்படி என்று சொல்லுவது என்றால்


காலமும் = கல்வி கற்க சிறந்த காலத்தை தேர்ந்து எடுக்க வேண்டும்.

இடமும் = படிக்கும் இடம் நன்றாக இருக்க வேண்டும்

வால் இதனை நோக்கி = இவற்றை நோக்கி

சிறந்துழி இருந்து = இதில் சிறந்தவற்றை தேர்ந்து எடுத்து

தன் தெய்வம் வாழ்த்தி = (ஆசிரியனின்) குல தெய்வத்தை வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் = எதை சொல்லிக் கொடுக்கப் போகிறோமோ அதன் பொருளை

உள்ளத்து அமைந்து = மனதில் அமைத்து....புத்தகத்தை பார்த்து சும்மா வாசிக்கக் கூடாது. ஆசிரியனின் மனதில் அந்த பாடமும், அதன் பொருளும் இருக்க வேண்டும். புத்தகம் , நோட்ஸ் இல்லாமல் பாடம் நடத்த வேண்டும்.

 
விரையான் = அவசரப் படக் கூடாது

வெகுளான் = மாணவனுக்கு புரியவில்லை என்றால், கோபிக்கக் கூடாது. மாணவன் தவறாக புரிந்து கொண்டாலோ, தவறு செய்தாலோ, அவன் மேல் கோபம் கொள்ளக் கூடாது

விரும்பி = விருப்பத்துடன் சொல்லித் தர வேண்டும். ஏதோ வாங்கின சம்பளத்திற்கு வேலை என்று இருக்கக் கூடாது

முகமலர்ந்து = மலர்ந்த முகத்துடன்

கொள்வான் கொள் வகை அறிந்து = மாணவனின் அறியும் திறம் அறிந்து

அவன் உள்ளம் கொள்ள = அவன் உள்ளத்தில் பாடம் ஏறும் வண்ணம்

கோட்டம் இல் மனதில் = கோட்டம் என்றால் வளைவு. குற்றம் இல்லாத மனத்தோடு

 நூல் கொடுத்தல் என்ப = நூலை சொல்லிக் கொடுத்தல் முறை

இன்றைய காலக் கட்டத்தில் இது எல்லாம் முழுவதுமாக முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரை முயற்சிக்கலாம்.

எல்லா ஆசிரியருக்கும் இதை முதலில் சொல்லித் தர வேண்டும்.


எப்படி இருந்த இனம், இந்தத் தமிழ் இனம். எவ்வளவு சிந்தித்திருக்கிறார்கள்.



3 comments:

  1. என்ன அழகான கருத்து! நன்றி.

    ReplyDelete
  2. அற்புதம். மாபெரும் புதையல் ஓன்று கண்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete