Sunday, September 8, 2013

குறுந்தொகை - நனைந்த பாறைகள்

குறுந்தொகை - நனைந்த பாறைகள் 


மழை !

மழையைக் கண்டால் எல்லோரும் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். குடைக்குள் மறைந்து கொள்கிறார்கள்.

எத்தனை பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும் ?

மழை முதலில் உடையை நனைக்கும்...பின் உடலை ...பின் உயிரை நனைக்கும்.

மழை விட்ட பின், ஊரே கழுவி விட்ட மாதிரி சுத்தமாக இருக்கும். இலைகள் எல்லாம் பளிச்சென்று இருக்கும். காற்றில் ஈரம் காதோரம் கவிதை சொல்லும்.

அது ஒரு சின்ன கிராமம். அவனும் அவளும் ஊருக்கு வெளியே அடிக்கடி சந்திப்பார்கள். யார் கண்ணிலும் படாமல் இருக்க அங்கிருக்கும் பெரிய பாறைகளுக்கு பின்னே மறைவாக அமர்ந்து பேசுவார்கள், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயல்வார்கள்...

கொஞ்ச நாளாக அவன் வரவில்லை. அவனைத் தேடி அவள் போகிறாள். அவர்கள் அமர்ந்திருந்த ஒவ்வொரு பாறையாக சென்று பார்க்கிறாள்.

அவர்கள் வருவார்களோ இல்லையோ, காத்திருப்பது ஒரு சுகம். அதிலும் மழையில் காத்திருப்பது இன்னும் சுகம்.

அவள் காத்து இருக்கிறாள்.

மழை அன்றும் பெய்தது.

பெய்து ஓய்ந்தது.

அங்கிருந்த பாறைகள் எல்லாம் குளித்து வரும் யானை போல பள பளப்பாக இருக்கிறது.

அவளோட தோழி கேட்க்கிறாள் "எங்கடி போயிட்டு வர்ற..இந்த மழையில் ?"

"அவனைத் தேடித்தான்...ஒரு வேளை வருவானோ என்று காத்து இருந்தேன்...வரலை " என்றாள்.

அவள் கண்ணில் வருத்தம் ஒரு புறம், இன்னொரு புறம் அவனுக்காக காத்திருந்த காதல் ஒரு புறம்....அதைத்தான் பசலை என்கிறார்களோ....

பாடல்


மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.

பொருள்

மாசுஅறக் = தூசி இல்லாத

கழீஇய = கழுவி விட்ட


யானை போலப் = யானையைப் போல

பெரும்பெயல் = அடித்துப் பெய்த மழையில்

உழந்த = அங்கும் இங்கும் அலையும்

இரும்பிணர்த் = கரிய, கரடு முரடான

துறு கல் = பெரிய பாறைகள்

பைதல் = நனைந்த, ஈரமான

ஒருதலைச் சேக்கும் = அந்த பாறைகளின் மறுபக்கம் என்னை சேர்க்கும். ஒருதலை என்றால் ஒரு பக்கம். பாறையின் அந்தப் பக்கம்.

நாடன் = அந்த ஊர்க் காரன்

நோய் தந்தனனே = காதல் எனும் நோய் தந்தான். பிரிவு எனும் நோய் தந்தான்.

தோழி! = தோழி

பசலை ஆர்ந்த = பசலை படர்ந்தது

 நம் குவளை அம் கண்ணே = குவளை போன்ற என் அழகிய  கண்ணே


காலம் காலமாக , இந்த காதல் பயிரை , மழைதான் நீர் விட்டு வளர்த்து இருக்கிறது. 


2 comments:

  1. என்ன ஒரு சிலுசிலுப்பான பாடல்!

    எனக்கு இந்த மாதிரி, சாதாரண மக்களின் உணர்வுகளைச் சொல்லும் பாடல்கள் மிகவும் பிடித்திருக்கின்றன - சும்மா கடவுள் புராணக் கதை சொல்லும் பாடல்களை விட.

    ReplyDelete
  2. மழையில் நனைவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். மழையைப் பற்றி அழகுறச் சொல்லி, இனிப்பான பாடலையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete