Wednesday, September 4, 2013

இராமாயணம் - நரைக்கு ஒரு பாடல்

இராமாயணம் - நரைக்கு ஒரு பாடல் 


ஒரு பெரிய காப்பியம் எழுதிக் கொண்டு போகும் கம்பன், ஒரு நரை முடிக்கு ஒரு பாடல்  எழுதுகிறான்.

அதிலும் எவ்வளவு ஆழம், அர்த்தம்.


தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப்
பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.

தீங்கு செய்த இராவணன் தீமை தான், அங்கு ஒரு நரை முடியாக வந்தது. அந்த நரை முடியை கண்ணாடியில் தசரதன் கண்டான்.

பாடல் என்னவோ அவ்வளவு தான் - மேலோட்டமாகப் பார்த்தால்.

கம்பன் அதில் எவ்வளவு செய்திகள் சொல்ல வருகிறான் என்று பார்ப்போம்.

முதலாவது, கவலையால், மிகுந்த மன அழுத்தத்தால் நரை வரும். ஏவா மக்கள் மூவா மருந்து.  தசரதனுக்கு ஒரு கவலையும் இல்லை. 60000 + 3 மனைவிகள், சக்கரவர்த்தி,  எதிரிகள் என்று யாரும் இல்லை. நாட்டில் குழப்பம் இல்லை. நாட்டில் வறுமை இல்லை.  அருமையான பிள்ளைகள். இருந்தும் நரை வந்தது. மிக நீண்ட நாட்களாக அரசாண்டவன். இப்போது நரை வரக் காரணம் என்ன ?

இராவணன் செய்த தீமையால் தசரதனுக்கு நரை வந்தது.  இராவண சம்ஹாரம்  நடக்க வேண்டும் என்றால் இராமன் அங்கே போக வேண்டும், நிறைய நிகழ்சிகள் நடக்க  வேண்டும்...எல்லாவற்றையும் தொடங்கி வைத்தது அந்த நரை முடி.

இரண்டாவது, அந்த நரை முடி, பாங்கில் வந்தது என்றான். பாங்கில் என்றால் அழகாக என்று அர்த்தம். மூப்பு என்பது ஒரு அழகு.  அது ஒரு இயற்கை. பல பேர் மூப்பு என்பது ஏதோ நோய் போல் அதை குணப் படுத்த வேண்டும் என்று அதோடு  போராடுகிறார்கள். அறுவை சிகிச்சை, முடிக்கு சாயம் பூசுவது, பௌடர்கள் , கிரீம்கள் என்று என்னனவோ செய்து எப்படியாவது மூப்பை மறைக்க முயற்சி  செய்கிறார்கள். கம்பன் சொல்கிறான், நரை முடியும் ஒரு அழகு என்று.  இயற்கையோடு ஒன்றிப் போக வேண்டும்.


தெய்வப் புலவர்  சேக்கிழார் சொல்வார் , "வடிவுரு மூப்பு வந்து" என்று. அழகான மூப்பு என்று.  காயை விட கனி அழகு.  கனிவதும் ஒரு  அழகுதான். ஆனால் நாம் பார்க்கும் போது , வயதானவர்கள் அழகாக இல்லை. இளையவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள். அது எப்படி.

காய் கனிந்தால் அழகு. வெம்பினால் அழகு இல்லை.

ஆசை சூட்டில், பொறாமையில், ஏமாற்றத்தில், கோபத்தில் மனிதர்கள் வெம்புகிறார்கள் . கனிவது இல்லை. நான் பார்த்தவரை வயதாக வயதாக மனிதனுக்கு ஆசை மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போகிறது. எங்கே இன்னும் ரொம்ப நாள் இருக்க மாட்டோமோ, இருக்கும் போதே எல்லாவற்றையும்  அனுபவித்து விட வேண்டும் என்று பறக்கிறார்கள். எனவே தான் அழகாய் இல்லை. ஆண்டு அனுபவித்து, போதும், வேண்டாம் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் ?

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பது இல்லை.

இந்த நரை முடியை பற்றி கம்பன் மேலும் சொல்லுகிறான்.



5 comments:

  1. //வயதானவர்கள் அழகாக இல்லை. இளையவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள். அது எப்படி.

    காய் கனிந்தால் அழகு. வெம்பினால் அழகு இல்லை.//

    ஆமாம்! அழகாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  2. S. We have to grow old gracefully :) ராவணனின் தீமை நரையாக வந்தது என்பது ரசிக்கும் படி உள்ளது.

    ReplyDelete
  3. Good Explanation.திலீபன் என்ன சொல்ல போறான்னு படிக்க ஆவலா இருக்கேன்.:-)

    ReplyDelete
  4. ஒரு நரை வந்தவுடன் தசரதன் நாடு, வீடு எல்லாவற்றையும் துறக்கத் தயாராகி விட்டானா?!! எனக்குப் பல நரை வந்தாலும், நான் எதையும் துறப்பதாக இல்லை! மீசை நரைத்தால் ஆசை நரைக்க வேண்டும் என்று யார் சொன்னது?

    ReplyDelete
  5. மனிதனுக்கு இயற்கையாகவே உள்ளுணர்வு . என்று ஒன்று உண்டு. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று தெரியும். பெண்களுக்கு இது சற்று அதிகமாகவே உண்டு. உள்ளுணர்வை கூர்மை படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மாறாக நாம் அதை மழுங்க அடித்துக் கொண்டே இருக்கிறோம்.
    தசரதனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிற்று....எனவே அவ்வளவு அவசரம். அவன் நினைத்தது போலவே நடந்தது.

    ReplyDelete