Wednesday, September 4, 2013

இராமாயணம் - தொடரும் நரை முடி

இராமாயணம் - தொடரும் நரை முடி 


இராவணன் இழைத்த தீமையால் தரசதனுக்கு நரை முடி  வந்தது என்று போன ப்ளாகில் பார்த்தோம்.

அந்த நரை முடியை வைத்து கம்பன் இன்னும் காவியம் பண்ணுகிறான்.


மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈது' எனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்

முதன் முதலில் நரை முடி எங்கு வரும் என்றால்,  பொதுவாக,காதோரம் வரும்.

அந்த இடத்திற்கு கன்ன மூலம் என்று  பெயர்.

ஏன் காதோரம் வருகிறது ?

நம்மிடம் ஏதோ ஒரு இரகசியம் சொல்ல வருகிறதாம். காதோடுதான் நான் பேசுவேன் என்று காதோரம் வருகிறதாம்.

காதோடு சொல்லும் விஷயங்கள் இரகசியமான விஷயங்கள். மற்றவர்களுக்குத்  தெரியாமல் நம்மிடம் மட்டும் சொல்ல அந்த காதோரம் ஒரு நரை மயிர் வருகிறது.

அது என்ன இரகசியம் சொல்லுகிறது ?

"உனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது. இன்னும்  எத்தனை நாள்தான் இப்படி  இருக்கப் போகிறாய்...இரை தேடியது போதும், இறை .தேடு...பொறுப்புகளை  உன் பிள்ளைகளிடம் கொடு...வேகத்தை குறை....இனிப்பை, எண்ணையை, மாவு பொருட்களை விலக்கு ...உண்டது போதும் ....போகும் இடத்திற்கு வழி தேடு ..."என்று பல விஷயங்களை நமக்குச் சொல்லுகிறது.

கேட்டால்தானே !

முதல் காரியமாக ஒரு கத்தரி கோலை எடுத்து அந்த நரை முடியை வெட்டி எறிந்துவிட்டுத்தான்  மறு வேலை.

மீண்டும் வந்தால், டை அடித்து அதை மறைப்பது.

நம் உடல் நமக்கு பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது. நாம் தான் கேட்பதே இல்லை.

தசரதனிடம் அந்த நரை முடி சொல்லியதாம்...

 "மன்னனே, இந்த அரசை மகனிடம் கொடுத்துவிட்டு நீ தவம் செய்யும் காலம் இது என்று  கன்ன மூலத்தில் வந்த வெளுத்த அந்த ஒற்றை நரை முடி கூறியதாம் "

பொருள்

மன்னனே! = மன்னனே என்று அவனை இரகசியமாக கூப்பிடுகிறது

அவனியை = இந்த உலகை

மகனுக்கு ஈந்து = மகனிடம் கொடுத்துவிட்டு

நீ = நீ

பன்னரும் =  பண்ணுவதற்கு அறிய

தவம்புரி = தவம் புரிகின்ற

பருவம் ஈது' எனக் = காலம் இது என

கன்ன மூலத்தினில் = கன்னத்தின் ஓரத்தில்

கழற வந்தென = சொல்ல வந்தது என

மின்னெனக் = மின்னலைப் போல

 கருமைபோய் வெளுத்த தோர்மயிர் = கருமை போய் வெளுத்தது ஒரு மயிர்.

மின்னல் மேகத்தில் இருந்து வரும். மழை மேகம் மின்னலைத் தரும். மழை மேகம் கருத்து இருக்கும். அதில் வரும் மின்னல் வெளுப்பாக இருக்கும். அது போல்  கருத்த முடிகளுக்கு நடுவே ஒரே ஒரு வெள்ளை மயிர் தோன்றிற்று என்றான் கம்பன்.

நரை முடிக்கு பின்னால் இவ்வளவு கதை சொல்ல கம்பனால் மட்டுமே முடியும்.



1 comment:

  1. என்ன அருமையான பாடல்! சும்மா தேன் சொட்டுகிறது!

    ReplyDelete