Saturday, September 21, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 




அந்தக் காலம். 

 ஒரு சின்ன கிராமம். 

 மின்சாரம் கிடையாது. மழையை நம்பிய விவசாயம். விவசாயம் இல்லை என்றால் வருமானம் இல்லை, வேலை இல்லை. சாப்பாட்டுக்கு  வழி இல்லை. 

மக்கள் என்ன செய்வார்கள் ? ஊரைக் காலி செய்துவிட்டு போய் விடுவார்கள். வீடுகளை அப்படியே விட்டு விட்டுப்  போய் விடுவார்கள்.

காலி வீட்டை ஏன் பூட்டி வைக்க வேண்டும் ? அப்படியே திறந்து கிடக்கும்.

வெயில். கொளுத்தும் வெயில். பட்டுப் போன மரங்கள். சூடு தாங்காமல் மரத்தில் உள்ள அணில்கள் அங்குள்ள வீடுகளின் மேல் உள்ள ஓடுகளில் தாவி தாவி இறங்கி வீட்டு முற்றத்தில் இறங்கி நிழல் தேடி வரும். வீட்டில் சிதறி கிடக்கும் சில பல தானிய மணிகளை உண்ணும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் எங்கும் ஓடும்...உணவைத் தேடி.

முற்றத்தை தாண்டிக் குதித்து வாசலுக்கு ஓடும். அங்கிருந்து முற்றம் வழியாக பின் வாசலுக்கு ஓடும்.  

அங்குள்ள வீடுகளில் அணில்களின் ஓட்டத்தைத் தவிர வேறு ஒரு உயிரும் இல்லை. 

ஆனால் , முன்பு அப்படி அல்ல. 

தேரும் திருவிழாவுமாக அந்த ஊர் ஒரே கோலாகாலமாக  இருக்கும்.வான வேடிக்கை, இசைக் கருவிகளின் இசை, கடைத் தெருக்களில் வாங்கவும் விற்கவும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.  

அந்த  வீட்டுகளுக்கு வருத்தம் இருக்குமா ? கணவனும், மனைவியும், பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து அவர்கள் சுக துக்கங்களைப் பார்த்த அந்த வீடுகளுக்கு, இப்போது தனிமையில் இருப்பது கொஞ்சம் வருத்தமாய் இருக்குமோ ?


அந்த வீடுகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறாள் அந்தப் பெண். அவள் காதலனும் பஞ்சம் பிழைக்க வெளியூர் போய் விட்டான். அவனோடு இருந்த காலத்தில் விழாக் கோலம் பூண்ட ஊர் போல சந்தோஷமாக  இருந்தேன்.ஆனால் இன்றோ அவனைப் பிரிந்து அணில்கள் விளையாடும் வெற்று ஊர் போல இருக்கிறது என் வாழ்க்கையும் 


 பாடல் 

காதலர் உழைய ராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.


பொருள் 






காதலர் = என் காதலன் 

உழைய ராகப் = உடன் இருந்த போது  

பெரிது உவந்து = பெரிதும் மகிழ்ந்து 

சாறு கொள்  ஊரில் = சந்தோஷமான ஊரில் 

புகல்வேன் மன்ற = மகிழ்ந்து இருப்பேன், ஆனால் 

அத்த = பாலை நிலத்தில்

நண்ணிய = பொருந்திய 

அங்குடிச் சீறூர் = அழகிய சின்ன ஊரில் 

மக்கள் போகிய = (ஊரைக் காலி பண்ணி விட்டு ) மக்கள் போன பின் 

அணில் ஆடு முன்றில் = அணில் விளையாடும் முற்றத்தில் 

புலம்பில் போலப்= தனிமையான வீடுகள் போல 

 புல்லென்று = பொலிவு இன்றி 

அலப்பென் = வருந்துவேன் 

தோழியவர் = தோழி அவர் 

அகன்ற ஞான்றே = என்னை விட்டு விலகிப் போன பின்.

1 comment:

  1. ஆகா, இது என்ன ஒரு உவமை! அந்தப் பெண் இப்படி ஒரு ஊரில் இருக்கிறாளோ இல்லையோ, அவளது மனதில் இப்படி ஒரு உவமை!

    என் மக்கள் வீட்டை விட்டுக் கல்லூரிக்குச் சென்ற பின், நானும் இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளலாம். யாரும் இல்லாத, அணில் ஓடிய வீடு போல இருக்கப் போகிறது.

    ReplyDelete