Wednesday, October 2, 2013

பிரபந்தம் - மாணிக்கம் கட்டி

பிரபந்தம் - மாணிக்கம் கட்டி 


தாயாக இருப்பது எளிது. தந்தையாக இருப்பது மிகக் கடினம். 
ஏன் ?
தாய் என்பது இயற்கையாக இருப்பது. ஒரு தாய் தன் பிள்ளையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறாள். பின், தன் உதிரத்தை பாலாக்கி பிள்ளைக்கு தருகிறாள். அவளுக்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு உயிர் சார்ந்தது , உடல் சார்ந்தது. 

தந்தை அப்படி அல்ல. அவனுக்கும் பிள்ளைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஒரு தந்தை பிள்ளை மேல் வைக்கும் பாசம் மிகக் கடினமானது. அவன் மிக மிக முயற்சி செய்ய வேண்டும். 

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 

A mother is a natural phenomenon 
whereas a father is social phenomenon என்று 

தாயின் அன்பைக் காட்டிலும் தந்தையின் அன்பு மிக மிக உயர்வானது. 

பெரியாழ்வார்  தன்னை கண்ணனின் தாயாக பாவித்து பாடல்கள் எழுதி இருக்கிறார். அவ்வளவு இனிமீயான பாடல்கள். 

பொதுவாக எல்லோரும் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்போம். 

சில பேர் அப்படி கேட்காவிட்டாலும், இறைவா , என்னை நல்லபடி வைத்து இருக்கிறாய், உனக்கு நன்றி என்று சொல்லுவார்கள். 

சில பேர், இறைவனை திட்டவும் செய்வார்கள். உனக்கு எவ்வளவு பூஜை எல்லாம் செய்தேன், என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் , உனக்கு கண் இல்லையா , உன் மனம் என்ன கல்லா என்று வைப்பவர்களும் உண்டு. 

இறைவன் உண்டென்பார், இல்லை என்பார் நமக்கில்லை கடவுள் கவலை என்று இருப்பாரும் உண்டு. 

யாராவது, கடவுளே , இங்கே வா, என்னிடம் வா, நான் உன்னை நல்லபடியாக பார்த்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது உண்டா. இறைவா , நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தியது உண்டா ? 

பெரியாழ்வார்  சொல்கிறார். 

பெரியாழ்வார்  பாடல்களில் இருந்து சில எனக்குப் பிடித்த சில பாடல்களைத் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.

இந்தப் பாடல்களை அறிவதால் என் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. 

சிறகடித்து சிலிர்த்து பறக்கும் சிட்டுக்குருவி, காதோரம் கவிதை பாடும் தென்றல், காலோரம் கதை பேசும் கடல் அலை, பால் தெளிக்கும் நிலவு, விரல் பிடிக்கும் பச்சை குழந்தையின் கைகள், உயிர் பூக்க வைக்கும் ரோஜா மலர்...இவற்றை எல்லாம் பார்பதால் என்ன பயனோ அதே பயன்தான்...

இறைவனை தொட்டிலில் இட்டு தாலாட்டித் தூங்கப் பண்ணுகிறார் ஆழ்வார்....இறைவனுக்கு தாய் இல்லை என்ற குறையை போக்குகிறார்...

பாடல்

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!

பொருள்



மாணிக்கம் கட்டி = மாணிக்கத்‌தை பதித்து

வயிரம் இடைகட்டி = இடை இடையே வைரங்களை பதித்து

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில் = சிறந்த பொன்னால் செய்த வண்ண மயமான சின்ன தொட்டில் 

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் = விரும்பி உனக்கு பிரமன் தந்தான் 

மாணிக் குறளனே = வாமானனாக வந்தவனே 

தாலேலோ!  = தாலேலோ 

வைய மளந்தானே தாலேலோ! = உலகை அளந்தவனே தாலேலோ 

தால் என்றால் நாடி. தாடை.

குழந்தையை கொஞ்சுபவர்கள் அதன் தாடையை தொட்டு "என் செல்ல கிளி , தங்கக் குட்டி ..." என்றெல்லாம் கொஞ்சுவார்கள்....அதிலிருந்து வந்தது தாலேலோ....

கண்ணனை தொட்டிலில் இட்டு தாலாடுகிறார் பெரியாழ்வார்  ...


1 comment:

  1. தாயின் அன்பையும், தந்தையின் அன்பையும் எப்படி ஒப்பிடமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் குழந்தைகளை நான் அதிகம் நேசிக்கிறேன, என் மனைவி அதிகம் நேசிக்கிறாளா என்பதை எப்படி எடை போட?

    ReplyDelete