Sunday, October 27, 2013

இராமாயணம் - நாயகன் ஏவியது

இராமாயணம் - நாயகன் ஏவியது 


அரசை பரதனுக்கு கொடுத்து நீயும் உன் தம்பியும் ஒன்றாக நீண்ட நாள் வாழுங்கள் என்று கோசலை சொல்லி விட்டாள் .

அடுத்ததாக , தசரதன் கானகம் போகச் சொன்னான் என்று சொல்ல வேண்டும்.

அதை எப்படி சொல்கிறான் என்று பாப்போம்.

அதற்க்கு முன்னால்,  நீங்கள் இராமன் இடத்தில் இருந்தால் இந்த செய்தியை எப்படி சொல்லி இருப்பீர்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

"அந்தக் கிழவன், அந்த சிங்காரி கைகேயி பேச்சை கேட்டு என்னை காடு போ என்று சொல்கிறான் " என்று கூட நாம் சொல்லலாம்.

அரசு போனது மட்டும் அல்ல, காடும் போக வேண்டும் என்றால் எப்படி இருக்கும் ?

அரசை பரதனுக்கு கொடு என்று கோசலை சொன்னவுடன் இராமன் மகிழ்ந்தான் என்கிறான்  கம்பன். எங்கே தாய் அரசை பரதனுக்கு தருவதற்கு தடை சொல்லி விடுவாளோ என்று நினைத்திருக்கலாம், அல்லது இந்த செய்தியை கேட்டு கோசலை வருந்துவாளோ என்று நினைத்திருக்கலாம்....அப்படி இல்லாமல் கோசலை அரசை பரதனுக்கு கொடு என்று சொன்னவுடன் அதைக் கேட்டு மகிழ்ந்து "சக்கரவர்த்தி, என்னை நல்ல வழியில் செலுத்துவதற்கு இன்னும் ஒன்று சொன்னான் " என்று அடுத்த வரத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான்.

பாடல்

தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
‘நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஒர் பணி’ என்று இயம்பினான்.


பொருள்





தாய் உரைத்த சொல் கேட்டுத் = தாயாகிய கோசலை சொன்ன அந்த சொல்லைக் கேட்டு 

தழைக்கின்ற = மகிழ்கின்ற

தூய சிந்தை = தூய்மையான சிந்தனை கொண்ட இராமன்

அத் தோம் இல் குணத்தினான் = அந்த குற்றமற்ற குணங்களை கொண்ட இராமன்

நாயகன் = சக்கரவர்த்தி

எனை = என்னை

நல் நெறி உய்ப்பதற்கு = நல் வழியில் நடத்துவதற்கு

ஏயது உண்டு  ஒர் பணி =ஏவிய ஒரு வேலை உண்டு

என்று இயம்பினான் = என்று கூறினான்



2 comments:

  1. அன்பின் ரெத்தின்., (உங்கள் முழுப் பெயர் தெரியவில்லை) உங்களது எளிய நடையில் அழகிய மொழிவன்மையில் நீங்கள் தெரிவு செய்து இங்கு பகிரும் அனைத்துப் பாடல்களுமே அழகு..உங்கள் ப்ளாக்கின் மெளன ரசிகன் நான்..மிக்க நன்றி ஐயா.. அன்புடன் சின்னக் கண்ணன்

    ReplyDelete
  2. தசரதன் எதற்காகத் தன்னைக் காட்டுக்குப் போகச் சொன்னான் என்று இராமன் கேள்வி கேட்டானா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அப்பாவை, அரசனை விட்டுக்கொடுக்காமல் "என் உயர்வுக்காகக் காடு போகச் சொன்னான்" என்று சொல்வது அருமை!

    இராமனையும், சீதையையும் பல இந்தியர்கள் பண்பின் சிகரமாக எண்ணுவது ஏன் என்று சிலமுறை யோசித்திருக்கிறேன். ஏதோ சாமி என்று கும்பிடுகிறார்கள் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், இராமன் எவ்வளவு பண்புடையவன் என்பது இந்த சில பாடல்களில் வெளி வருகிறது.

    இந்த ப்ளாக் மூலம் இல்லாவிட்டால், நான் இந்தப் பாடல்களையெல்லாம் எங்கே படித்திருக்கப் போகிறேன்? மிக்க நன்றி - உன் சிரமத்திற்கும், சிரத்தைக்கும்.

    ReplyDelete