Saturday, October 26, 2013

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

பரதன் உன்னை விட மூன்று மடங்கு நல்லவன் , அவனுக்கு அரசாட்சியை கொடு என்று கோசலை கூறியதை முந்தைய ப்ளாகில்  பார்த்தோம்.

மேலும் கோசலை சொல்கிறாள்

இராமா, மன்னன் இட்ட கட்டளை எதுவாயினும், அது நீதி அல்ல என்று நீ எண்ணக் கூடாது. அதை அப்படியே  ஏற்று செய்வது உனக்கு அறம்.. இந்த அரசை உன் தம்பிக்கு நீ கொடுத்து அவனுடன் ஒற்றுமையாக பல்லாண்டு வாழ்க " என்று வாழ்த்துகிறாள்.


பாடல்

என்று, பின்னரும், ‘ மன்னவன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்;
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து,
ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள்.


பொருள்

என்று, பின்னரும் = மேலும் சொல்லுவாள்

மன்னவன் ஏவியது = அரசன் இட்ட கட்டளை

அன்று எனாமை =   நீதியின் பாற்பட்டது என்று எண்ணாமல்

மகனே!  = இராமா

உனக்கு அறன் = அரசன்  அப்படியே செய்வது உனக்கு அறன்

நன்று =  நல்லது

நும்பிக்கு =  உன் தம்பிக்கு

நானிலம் நீ கொடுத்து = இந்த அரசை நீ கொடுத்து

ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள் =  ஊழிக்  ஒன்றாக வாழுங்கள் என்று வாழ்த்தினாள்


 அப்பா  சொன்னது என்று  நினைக்காதே. அரசன் இட்ட கட்டளை என்று .எடுத்துக் கொள் இராமா என்று கூறுகிறாள்.

அப்பா சொன்னார் என்று எடுத்துக் கொண்டால் "போப்பா , உனக்கு வேறு வேலை இல்லை " என்று அதை உதாசீன படுத்த எண்ணியிருக்கலாம்.

அது மட்டும் அல்ல , அதை செய்வது அரச கட்டளை என்பதால் மட்டும் அல்ல , அதை செய்வது உனக்கு அறன் , கடமை என்று கூறுகிறாள்.

தசரதன் இந்த அரசை பரதனுக்கு கொடுத்தான் என்று கொள்ளாதே.

நீ இந்த அரசை அவனிடம் கொடு என்று கூறுகிறாள் கோசலை.

"நீ இதை நல்கு " என்கிறாள்.

சரி அரசை கொடுத்துவிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொண்டு இருக்காதீர்கள். ஒன்றாக ஒற்றுமையாக ஆண்டு பல வாழுங்கள் என்று வாழ்த்துகிறாள்.

என்ன ஒரு நிதானம். என்ன ஒரு தெளிவு.

அடுத்து இராமன் மெல்ல அடுத்த ஒரு சேதி சொல்லப் போகிறான்...தான் காடு போக வேண்டிய வரத்தை சொல்லப் போகிறான்.

எப்படி சொல்கிறான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.





1 comment:

  1. இது என்னப்பா, ஒருவரை விட ஒருவர் பண்பில் உயர்ந்தவராய் இருக்கிறார்கள்! அமோகம்!

    ReplyDelete