Monday, October 28, 2013

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி


என்னை நல்ல நெறியில் செலுத்த சக்கரவர்த்தி சொன்ன பணி ஒன்று உண்டு என்று இராமன் கோசலையிடம் கூறினான்.

மெல்ல மெல்ல தான் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை சொல்ல வருகிறான்.

"பெரிய கானகத்தில் உள்ள பெரிய தவம் செய்யும் முனிவர்களோடு பதினாலு வருடம் இருந்துவிட்டு வர வேண்டும்" என்று கூறினார் என்று கூறினான்.

பாடல்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,
'"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். 

பொருள்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு = இன்று உரைத்த வேலை என்ன என்று கேட்ட கோசலையிடம்

ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் = பதினாலு வருடம்

அகல் கானிடை = அகன்ற கானகத்தில், விலகி நிற்கும் கானகத்தில்

மாண்ட = மாண்புள்ள 

மாதவத் தோருடன் = மா தவம் செய்தோருடன்

வைகிப் பின் = உடன் இருந்து பின்

மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். = மீண்டும் நீ வர வேண்டும் என்று கூறினான் என்றான்.

முனிவர்களை சென்று பார்த்து விட்டு வரும்படி சொன்னான் என்று மிக மிக   எளிதாக  சொல்கிறான்.

பிரச்சனைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இராமன் பாடம் நடத்துகிறான்.

கைகேயி சொன்னது

"தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நணுகி, புண்ணிய துறைகள் ஆடி" என்று.

இராமன் சொல்கிறான். முனிவர்களை பார்த்துவிட்டு வரும்படி அரசன் சொன்னான் என்கிறான்.

துன்பங்களை துச்சமாக எண்ணிப் பாருங்கள். அவை பெரிதாக இருக்காது.

சின்ன விஷயத்தை கூட பெரிதாக பெரிதாக ஊதி பெரிதாக்கி கவலைப்  படுபவர்களும்  இருகிறார்கள். அவர்கள் வாழ்கையை நரகமாக்கி கொள்பவர்கள்.

காலா, என் காலருகில் வாடா என்று பாரதி சொன்னது  போல...

மரணப் பிரமாதம் நமக்கு இல்லை என்றார் அருணகிரி

துன்பங்களை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது அதன் வேகம்....


இராமனிடம் இருந்து படிப்போம். .



1 comment:

  1. இராமன் எப்படி எடுத்துக்கொண்டானோ இல்லையோ, தனது அன்னையின் மனம் நோகாமல் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்!

    ReplyDelete