Monday, October 7, 2013

தேவாரம் - வயதான போது

தேவாரம் - வயதான போது 


முதுமை. 

இளமையில், உடலில் வலு இருக்கும் போது உலகை வென்று விடலாம் என்று தோன்றும். நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்று தோன்றும். விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி என்று இலகுவன் கூறியது போல விதியை புரட்டி போட்டு விடலாம் என்று தோணும்....

வயதாகும்...

புலன்கள் தளரும். நினைத்ததை செய்ய முடியாது. 

கண்ணால் கண்டு உணர வேண்டியதை கையால் தடவி உணருவோம். மனம் பேச நினைத்ததை  வாய் பேசாமல் குளறும். நிற்க முடியாது. நடக்க முடியாது. சொன்னது மறந்து போய் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருப்போம். 

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இன்றி அறிவு மங்கிப் போகும் நேரம். 

மனைவியும் மக்களும் சுற்றமும் நட்பும் கேலி செய்யும். யார் துணையும் இன்றி மனம் தவிக்கும்....அப்போது 

அஞ்சேல் , நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்பவன் இறைவன் மட்டுமே. அவன் அருள் செய்பவன் அமரும் கோவில் திருவையாறு. 

அந்த கோவிலில் , பெண்கள் பாட்டு பாடி நடனமாடி வலம் வருகிறார்கள். அப்போது பூஜை நேரம் என்பதால் முரசு அடிக்கிறது. அதை மேகத்தில் இருந்து வரும் இடி என்று நினைத்து சில குரங்குகள் மரதத்ின் மேல் ஏறி மழை வருகிறதா என்று பார்க்கும்.  (ஏன் சில மந்திகள் என்று சம்மந்தர் கூறினார் ?) 


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி
யலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங் கோவில்
வலம்வந்த மடவார்க ணடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவை யாறே

சீர் பிரிப்போம்:

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்து ஐமேல் உந்தி
அலமந்த போது அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடனம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி
சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே

பொருள்:

புலன் ஐந்தும் = ஐந்து புலன்களும்

பொறி கலங்கி = கலக்கமுற்று

நெறி மயங்கி = வழி தெரியாமல்

அறிவு அழிந்து = அறிவு அழிந்து

ஐமேல் உந்தி = ஐந்து புலன்களும் உந்தித் தள்ள

அலமந்த போது = இறுதி காலம் வந்த போது

அஞ்சேல் என்று = அச்சப் படாதே என்று

அருள் செய்வான் = அருள் செய்யும் இறைவன்

அமருங் கோயில் = உறையும் கோவில்

வலம் வந்த =அந்த கோவிலை சுற்றி வரும்

மடவார்கள்  = பக்தர்கள்

நடனம் ஆட = நடனம் ஆட

முழவு அதிர = முரசு, மத்தளம் ஒலிக்க

மழை என்று அஞ்சி = ஏதோ மழை வரப்போகிறது என்று அஞ்சி

சில மந்தி = சில குரங்குகள்

அலமந்து = மாலை நேரத்தில்

மரமேறி  = மரத்தின் உச்சியில் ஏறி

முகில் பார்க்கும் = மழை மேகம் வருகிறதா என்று பார்க்கும்

திருவையாறே = திருவையாறே 


2 comments:

  1. நடம் ஆட is correct. not நடனம் ஆட

    ReplyDelete
  2. சில மந்திகள் என்று சொன்னதற்கு காரணம் அவை வெளியூரிலிருந்து வந்திருந்த மந்திகள். உள்ளூர் மந்திகளுக்கு, பழக்கத்தினால், அது முழவு ஓசை என்று தெரியும்

    ReplyDelete