Sunday, November 10, 2013

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?


புத்தர் வாழ்வில் நடந்ததாக சொல்லப் படும் ஒரு  சம்பவம்.

ஞானம் பெற்ற பின் புத்தர் மிக மிக அமைதியாக  இருந்தார். அவரை பார்த்தவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது - எவர் ஏதோ அறிந்திருக்கிறார் என்று. அவர் கண்ணில் தெரியும் ஒளி, அவரின் நிலை அவற்றை கண்ட மக்கள் அவரிடம் கேட்டார்கள் ...

"நீங்கள் ஏதோ ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது ...அதை என்ன என்று எங்களுக்குச் சொல்லக் கூடாதா "

புத்தர் சிரித்துக் கொண்டே சொன்னார் "முதலில் அதை சொல்வது  கடினம்.அப்படியே சொன்னாலும் நீங்கள் அதை  மாட்டீர்கள். நான் சொல்வதை அல்ல நீங்கள் கேட்பது. நீங்கள் உங்களுக்கு வேண்டியவற்றைதான் கேட்பீர்கள்...எனவே பேசாமல் இருபதே நலம் என்று நினைக்கிறேன் "

பின் மிகவும்  அவரை பேச வைத்தார்கள்.

ஞானிகள் எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

"சும்மா இரு" என்று முருகன் உபதேசம் செய்ததாக அருணகிரி சொல்கிறார்.

"பேசுவதால் பயனிலை" என்கிறார் பாரதியார் .

Sitting silently
Doing nothing
Grass grows by itself

என்கிறது ஜென் பாடல்.

இங்கே தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்


"பெரியவர்கள் சொன்னதை சொல்லிக் கொண்டிருப்பதை தவிர நாம் ஒன்றும் புதிதாக உணர இயலாது. ஆசை அற்றவர்கள் அன்றி மற்றவர்கள்  அவனை அறிய முடியாது. குற்றமற்றவர்கள் மனதில் இருப்பவனை வணங்கி இருப்பதை விட்டு விட்டு பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் "

பாடல்


பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்

சீர் பிரித்த பின்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் அறியலாவானும் அல்லன்
மாசு அற்றார் மனத்து உள்ளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தால் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்


பொருள் 

பேசிற்றே பேசல் அல்லால் = பேசியதையே பேசுவதைத் தவிர

பெருமை ஒன்று உணரல் ஆகாது  = (அவன்) பெருமை ஒன்றையும் நம்மால் உணர முடியாது

ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் = ஆசு என்பதற்கு விரைவு என்று ஒரு பொருள் உண்டு. ஆனால் ஆசை என்பது சரியாக இருக்கும். ஆசை அற்றவர்களுக்கு இல்லாமல்

அறியலாவானும் அல்லன் = அவன் அறிய முடியாதவன்

மாசு அற்றார் மனத்து உள்ளானை = குற்றம் அற்ற உள்ளத்தில் இருப்பவனை

வணங்கி நாம் இருப்பது அல்லால்  = வணங்கி நாம் இருப்பதைத் தவிர

பேசத்தால் ஆவது உண்டோ = பேசுவதால் ஆவது உண்டோ ?

 பேதை நெஞ்சே நீ சொல்லாய் = பேதை நெஞ்சே நீ சொல்




1 comment:

  1. இதில் ஏதோ ஆழமான கருத்து இருக்கலாம். பல சமயப் பெரியவர்கள், தனது இறை அனுபவத்தைச் சொல்லி விளக்க முடியாது என்று கூறியுள்ளனர். தானே உணர்ந்தால்தான் உண்டு என்றால், அந்தப் பயணத்தை நம்பிக்கையை மட்டுமே முன்னிட்டுத் தொடங்கினால்தான் உன்று. கஷ்டமான விஷயம்.

    ReplyDelete