Sunday, November 17, 2013

இராமாயணம் - விதியினை நகுவன

இராமாயணம் - விதியினை நகுவன




விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.

நாட்டின் சிறப்பை, வளத்தை சொல்ல வந்த கம்பன் மேற்கண்டவாறு கூறுகிறான்.

அந்த ஊரில் பெண்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா ? (ஜொள்ளு விட தயாராகலாம்)


விதியினை நகுவன, அயில் விழி

அவர்களின் விழிகள் விதியை பார்த்து சிரிக்கும். விதி என்றால் அதை செய்யும் பிரமன். பிரமனும் மயங்குவான் அவர்கள் விழிகளை பார்த்து. "நானா இப்படி ஒரு அழகான விழிகளை படைத்தேன்" என்று பிரமனும் பிரமிப்பான். அந்த விழிகள் பிரமனை பார்த்து சிரிக்குமாம்.  அயில்  என்றால் கூர்மையான என்று பொருள்.

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப்  கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

என்பது கந்தரலங்காரம். அயில் வேலன் = கூர்மையான வேலை உள்ளவன் (=முருகன்)


பிடியின் கதியினை நகுவன, அவர் நடை

அந்த பெண்களின் நடை பெண் யானையின் நடையை பார்த்து சிரிக்கும். பெண் யானையின் நடை மெதுவாக இருக்கும். அழகாக இருக்கும். ".ஹ்ம்ம்...இதெல்லாம்  ஒரு நடையா .." என்று அந்த பெண்களின் நடை யானைகளின் நடையை பார்த்து சிரிக்கும்.


கமலப் பொதியினை நகுவன, புணர் முலை

அந்த பெண்களின் மார்புகள் தாமரை மொக்குகளை பார்த்து சிரிக்கும். தாமரை மலரும், கூம்பும்....ஆனால் அந்த பெண்களின் மார்புகள் அப்படி அல்ல..."உன்னை போய்  என் மார்புகளுக்கு உவமையாகச் சொல்கிறார்களே" என்று அந்த பெண்களின்  மார்புகள் தாமரை மொட்டுகளை பார்த்து நகைக்குமாம். "புணர் முலை" என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.


கலை வாழ் மதியினை நகுவன, வனிதையர் வதனம்

வானில் உள்ள நிலவை பழிக்கும் அவர்கள்  முகம். ஏன்? நிலவு வளரும் தேயும், அதில் கறை உண்டு...களங்கம் இல்லாத இந்த பெண்களின் முகம் நிலவை பார்த்து  சிரிக்கும். "நீ எனக்கு உவமையா " என்று.

1 comment:

  1. அப்பா... ரொம்ப நாளா ஜொள்ளு இல்லாமல் இருந்த வறட்சிக்கு, நல்ல மழைச் சாரல் போல ஒரு கவிதை! இன்னும் ரெண்டு மூணு ஜொள்ளு கவிதை வந்தால்தான் வறட்சித் தாகம் அடங்கும்.

    ReplyDelete