Tuesday, November 19, 2013

பிரபந்தம் - முகத்தன கண்கள்

பிரபந்தம் - முகத்தன கண்கள் 



வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே

அந்த பெண்கள் வாசலில் மணலில் வீடு கட்டி, அழக்காக கோலம் போட்டிருக்கிறார்கள். கண்ணன் வந்து அதை பார்க்கும் சாக்கில் அந்த வீட்டையும் கோலத்தையும் அழித்துவிட்டுப் போகிறான்.

அந்த பெண்களுக்கு அப்ப கூட கண்ணன் மேல் கோபம் வர வில்லை. அவனை பார்த்து உள்ளம் உருகுகிறது. காரணம் அந்த கண்ணனின் கண்கள்.

பாடலை கொஞ்சம் சீர் பிரிப்போம்.

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திர படம் வீதிவாய் 
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி ஆகிலும் உந்தன் மேல் 
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோதம் ஒன்றும் இல்லோம் கண்டாய் 
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே 



பொருள்

வெள்ளை நுண் மணல் கொண்டு = வெண்மையான நுண்மையான மணலை கொண்டு

சிற்றில் = சின்ன இல் = சிறிய வீடு

விசித்திர படம் = வியக்கும் படம் , இங்கு கோலம் என்று கொள்ளலாம்

 வீதிவாய்  = வாசலில்


தெள்ளி = தெளித்து

நாங்கள் இழைத்த கோலம் = நாங்கள் வரைந்த கோலம்

அழித்தி ஆகிலும் = அழித்தாய் என்றாலும்

உந்தன் மேல் = உன் மேல்

உள்ளம் ஓடி உருகல் அல்லால் = உள்ளம் உருகி ஓடுதல் அல்லால்

உரோதம் = விரோதம்

 ஒன்றும் இல்லோம் கண்டாய் = ஒன்றும் இல்லை

கள்ள மாதவா = கள்ளத்தனம் கொண்ட மாதவா

கேசவா = கேசவா

உன் முகத்தன கண்கள் அல்லவே = உன் முகத்தில் உள்ளவை கண்கள் அல்லவே.


கோலத்தையும் வீட்டையும் அழித்ததற்காக வருத்தப் படவில்லை என்கிறாள் ஆண்டாள்.

இதற்கு ஒரு பாடலா ?

நாம் இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கிறோம்.

கேட்டது எல்லாம் கிடைப்பது இல்லை.

மாறாக சில சமயம் துன்பம் வந்து சேர்வதும் உண்டு.

பண நஷ்டம், மனக்  கஷ்டம், உடல் நலக் குறைவு, எதிர்பார்த்தது நடக்காமல் போவது இப்படி ஏதோ வகையில் துன்பம் வந்து சேருகிறது.

அப்போது இறைவன் மேல் நமக்கு அன்பா வரும் ? கோபம் வரும் ... அவனை திட்டி தீர்ப்போம் ...

ஆண்டாள் சொல்கிறாள் ...கண்ணா நீ எனக்கு துன்பம் தந்தாலும் உன் மேல் கோபம் இல்லை....என் உள்ளம் உருகுகிறது என்கிறாள்.

பக்தி...காதல்....துன்பத்திலும் இன்பத்தை பார்க்கும்.



1 comment:

  1. It's easier to love god than to love another human being. With god, you can imagine anything you want, but in real love, you have to face reality!!!

    ReplyDelete