Saturday, November 30, 2013

இராமாயணம் - போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

இராமாயணம் - போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது


இராமாயணத்தில் அறிவுரைகள், அறவுரைகள் நிறைய உண்டு.

வாழ்க்கைக்கு வேண்டிய தத்துவங்களை இராமாயணம் நமக்குச் சொல்லித் தருகிறது. காலம் கடந்து நிற்கும் அந்த தத்துவங்களில் சிலவற்றை நாம் வரும் ப்ளாகுகளில் சிந்திக்கலாம்.

பொதுவாக புகழ் வேண்டும் என்றால் நாம் என்ன நினைப்போம் ? வெற்றி பெற்றால் புகழ் கிடைக்கும்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் யாரோ தோற்க வேண்டும்.

தோற்பவன் எளிதில் தோற்பானா ? சண்டையிடுவான்.

சண்டை என்றால் வில், வாள், கத்தி, கேடயம் என்று இல்லை. வாதங்கள், தர்க்கங்கள் என்று எத்தனையோ குட்டி குட்டி யுத்தங்கள். சின்ன சின்ன போர்கள். எல்லா தர்க்கத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று  நினைக்கிறோம். வாதங்களில் வென்று நண்பர்களின் நடப்பை , கணவன்/மனைவியின்  அன்பை இழக்கிறோம்.

இப்படி சின்ன சின்ன போர்களில் நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொள்கிறோம்.

இராமனுக்கு முடி சூடுவதற்கு முன் வசிட்டர் சில புத்தி மதிகளை  கூறுகிறார்.

"யாரோடும் பகை கொள்ளாதே. அப்படி இருந்தால் போர் மறைந்து போகும் , ஆனால் உன் புகழ் மறையாது.  போர் இல்லை என்றால் உன் படைக்கு சேதம் இல்லை. அது அழியாது. அழியாத பெரிய படையை கண்டு மற்றவர்கள் உன் மீது போர் செய்ய மாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது .."

பாடல்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? 


பொருள்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் = யாரோடும் பகை இல்லை என்ற பின்

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது = போர் இல்லாது போகும்; ஆனால் புகழ் இல்லாது போகாது

தன் தார் ஒடுங்குல் செல்லாது = (உன்) படை அழியாது

அது தந்தபின் = அது நடந்த பின்

வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? = பகைவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்ற நினைப்பு வருமோ ? வராது.

இராமாயணம் அன்பை போதிக்கிறது. சண்டை வேண்டாம் என்கிறது. போர் இல்லாமலே  புகழ் வரும் என்கிறது. பகைவனையும் அன்பால் வெல்லலாம் என்கிறது. 

நம்முடைய போர்களை எண்ணிப் பார்ப்போம். 


4 comments:

  1. ஆனால் படை பெரிசாக இருக்க வேண்டும் என்றுதானே சொல்கிறது.

    ReplyDelete
  2. படை அழியாது என்றால், படை வீரர்களுக்குச் சேதம் வராது என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. லூசு
    மொழி பொருள் அறி

    ReplyDelete
  4. போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது...
    ணா என்னப்பா பொருள்?
    கவிதை தெரியுமா? தெரியாதா ?

    ReplyDelete