Wednesday, November 13, 2013

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?


பாண்டவர்களை அஸ்தினா புரத்தில் தான் கட்டிய மண்டபத்தை காண வரும்படி ஓலை அனுப்புகிறான் துரியோதனன்.

அந்த ஓலையை திருதராஷ்டிரனை கொண்டு கையெழுத்து இட வைக்கிறான்.

அந்த ஓலையை விதுரனிடம் கொடுத்து அனுப்புகிறான்.

ஓலையை பெற்ற தருமன், தம்பிகளிடம் கேட்கிறான் "போகலாமா , வேண்டாமா " என்று.

அர்ஜுனன் போக வேண்டாம் என்று கூறுகிறான் ....


பாடல்

தேற லார்தமைத் தேறலுந்தேறினர்த் தேறலா மையுமென்றும் 
மாற லாருடன் மலைதலு மாறுடன்மருவிவாழ் தலுமுன்னே 
ஆற லாதன வரசருக் கென்றுகொண்டரசநீ தியிற்சொன்னார் 
கூற லாதன சொல்வதென் செல்வதென்கொடியவ னருகென்றான்.

சீர் பிரிக்காமல் புரியாது....:)

தேறலார் தம்மை தேறலும் தேறினார் தேறலாமையும் என்றும் 
மாறலார் உடன் மலத்தலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே 
ஆறு அலாதன அரசர்க்கு என்று கொண்ட அரச நீதியில் சொன்னார் 
கூறலாதன சொல்வதென் செல்வதென் கொடியவன் அருகு என்றான் 

நம்பாதவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது
நட்பு கொண்டவர்களை நம்பாமல் இருக்கக் கூடாது
நண்பர்களோடு சண்டை போடக் கூடாது
பகைவர்களோடு நட்பு பாராட்டக் கூடாது
இவை அரசர்களுக்கு என்று சொல்லப் பட்ட வழி
இதை விட்டு அவனிடம் போவது என்ன ?


பொருள்

தேறலார் = நம் நம்பிக்கையில் தேராதவர்கள்

தம்மை = அவர்களை

தேறலும் = ஏற்றுக் கொள்ளுதலும்

தேறினார் = ஏற்றுக் கொண்டவர்களை (நண்பராக)

தேறலாமையும் = நம்பாமல் இருப்பதும்

என்றும் = எப்போதும்

மாறலார் உடன் = மாறாமல் ஒன்றாக நம்முடன் இருப்பவர்களிடம்

மலத்தலும் = சண்டை இடுதலும்


மாறுடன் = மாறு பட்டவர்களுடன் (பகைவர்களுடன் )

மருவி வாழ்தலும் = ஒன்றாக வாழ்தலும்

முன்னே  = முன்பே

ஆறு அலாதன = ஆறு என்றால் வழி. வழி அல்லாதன

அரசர்க்கு என்று கொண்ட = அரசர்களுக்கு என்று

அரச நீதியில் சொன்னார்  = அரச நீதியில் சொன்னார்

கூறலாதன சொல்வதென் = அதில் கூறாதவற்றை நீ (தருமனே) ஏன் சொல்கிறாய். அறம் இல்லாததை ஏன் கூறுகிறாய்

செல்வதென் = செல்வது என் ? ஏன் போக வேண்டும் ?

கொடியவன் அருகு என்றான் = கொடியவனான துரியோதனன் அருகில் என்றான்

கொடியவர்கள் கிட்ட கூட போகக் கூடாது.



2 comments:

  1. நல்ல பாடல். உன் உரை இல்லாமல் யாராலும் புரிந்து கொள்ள முடியாது!

    ReplyDelete
  2. சீர் பிரித்தாலும் உங்கள் உரை இல்லாமல் புரியாது. நன்றி

    ReplyDelete