Saturday, November 30, 2013

வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?

வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?


குந்தி போருக்கு முன் கர்ணனை சந்திக்கிறாள். கர்ணனின் தாய் தான் தான் என்று சொல்கிறாள். கர்ணனை பாண்டவர்களோடு சேரும்படி சொல்கிறாள். கர்ணன் மறுக்கிறான். அவன் ஏன் பாண்டவர்களோடு சேர மாட்டேன்  என்பதற்கு பல காரணங்கள் சொல்கிறான். அதில் ஒன்று

" அம்மா,ஒரு முறை நானும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு பின் துரியோதனன் வந்தான். எனக்கு பின்னால் வந்ததால் நான் அவனை கவனிக்க வில்லை. ஆனால், வாயிலை பார்த்து அமர்ந்து இருந்த பானுமதி தன் கணவன் வருவதை கண்டு எழுந்தாள் . அவள் ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கத் தான் எழுந்திருக்கிறாள் என்று எண்ணி அவளை பிடித்து உட்கார வைக்க முனைந்தேன். அப்போது அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலை என்ற ஆபரணம் அறுந்து அதில் உள்ள மணிகள் சிதறி ஓடின. அங்கு வந்த துரியோதனன் அந்த முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று  கேட்டான்.அப்படி என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த துரியோதனனுக்காக போர் செய்வது என் செஞ்சோற்று கடன், தர்மம் , புகழ் தரும் செயல் "  என்றான்.

பாடல்

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

தருமமும்!'


பொருள்

மடந்தை = துரியோதனின் மனைவி பானுமதி

பொன்-திரு மேகலை மணி = இடையில் கட்டியிருந்த மேகலை என்ற பொன் ஆபரணத்தில் உள்ள மணிகள்

உகவே = உதிர்ந்து விழ

மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் = மிகமிக அற்புதமான வரி. அவர்கள் (கர்ணனும், பானு மதியும் ) தனியாக  இருந்தார்கள். ஆனால் அந்த இடம் குற்றமோ தவறோ நிகழாத தனிமையான இடம். மாசு என்றால் குற்றம். குற்றம் அற்ற தனிமியான இடம்.


புரிந்தே நான் அயர்ந்து இருப்ப = நான் விளையாட்டு மும்முரத்தில் அயர்ந்து இருக்க

 "எடுக்கவோ? கோக்கவே?'" என்றான் = அப்படி உதிர்ந்த முத்துகளை எடுக்கவோ கோர்கவோ என்றான்

திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் = உறுதியான வேலை கொண்ட இராசராசனான துரியோதனுக்கு

 செருமுனைச் சென்று = போர்க்களம் சென்று

செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே = உண்ட சோற்றுக்கு கடன் கழிப்பதுவே

எனக்கு இனிப் = எனக்கு

புகழும், கருமமும், தருமமும்!'= புகழும் கருமமும் தருமமும் ஆகும்.

எடுப்பது சரி. எதற்கு கோர்க்க வேண்டும் ?

முத்தில் நூலை கோர்ப்பது என்றால் கை நடுங்காமல் இருக்க வேண்டும்.

கை எப்போது நடுங்கும் ? பயத்தில் உதறும். கோபத்தில், ஆத்திரத்தில் நடுங்கும்.

துரியோதனுக்கு பயமும் இல்லை, கோபமோ ஆத்திரமோ இல்லை. நிதானமாக இருக்கிறான் என்று காட்டவே "கோர்க்கவோ" என்றான்.

மேலும்,

கர்ணனுக்கோ பானுமதிக்கோ கொஞ்சம் பதற்றம் இருக்கலாம்....துரியோதனன் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்று. அவர்களால் கோர்க்க முடியாது என்பது மறைமுக கருத்து.

நீங்கள் விளையாடுங்கள், நான் கோர்த்து தருகிறேன் என்ற இடத்தில் துரியோதனன் தன் மனைவி மேல் வைத்த நம்பிக்கையும், தன் நண்பன் மேல் வைத்த  நம்பிக்கையும் ஒளிர் விடுகிறது.

ஒரே ஒரு வாக்கியம். எவ்வளவு அர்த்தம்.

அப்படி பேசப் படிக்க வேண்டும்.

இப்படி சிறந்த பல பாடல்களை கொண்டது வில்லி பாரதம்.


நேரம் இருப்பின் மூல நூலை படித்துப்  பாருங்கள்.

3 comments:

  1. என்ன ஒரு அற்புதமான பாடல். என் கண்ணில் நீரை வரவழைத்தது. நட்பு என்றால் இதுவன்றோ!

    உன் விளக்கமும் அருமை. "கோக்கவோ" என்ற சொல்லுக்கு இவ்வளவு அர்த்தம் நான் எண்ணிப் பார்த்ததில்லை. நன்றி.

    ReplyDelete
  2. பிறன் மனைவியைத் தொடுவதே அநாகரீகம் , இதில் கையைப்பிடித்து இழுத்து உட்கார வைக்க முனைவது சரியாகப்படவில்லை .

    ReplyDelete
    Replies
    1. நண்பனின் மனைவி தங்கையாக என்னும் போது தங்கையின் கரம் பிடித்தாள் தவறோ ?

      Delete