Saturday, November 9, 2013

இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும்

இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும் 


நாம் அன்பு கொண்டவர்களின் மரணம் மிகப் பெரிய துக்கம். நம் மரணம் துக்கம் அல்ல பயம்.

நிலையாமை பற்றி எவ்வளவுதான் தெரிந்து இருந்தாலும் நம் நெருங்கியவர்களின் மரணம் உலுக்கித்தான் போடுகிறது.

தசரதன் இறந்து போனான் என்ற செய்தியை கேட்டவுடன் இராமன் மயங்கி விழுந்தான். அரசு போனதற்கு கலங்கவில்லை. காடு போ என்று சொன்னபோதும் கலக்கம் இல்லை. ஆனால் , தந்தை இறந்தான் என்ற செய்தி கேட்ட போது இராமனுக்கு துக்கம் தாளவில்லை.

பாசம் அந்த பரமனையும் விடவில்லை.

கலங்கிய இராமனுக்கு வசிட்டன் வாழ்வின் நிலையாமை பற்றி கூறுகிறான்.

நம் வாழ்விலும் பிரிவுகள் நிகழலாம். அந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள இந்த மாதிரி ஞானிகளின் வாசகங்கள் உதவலாம்.

மிக மிக ஆழமான, சிந்திக்க வேண்டிய பாடல்கள்...அதில் ஒன்று


பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்

     வரம்பு கண்ட நீ?

பொருள்

"துறவறமும் இல்லறமும் அல்லது உயிர்களுக்கு வேறு வழி இல்லை. இறப்பும் பிறப்பும்  இயற்கை என்பதை எல்லாம் அறிந்த நீ எப்படி மறந்தாய் "

மேலோட்டமாய் பார்த்தால் இவ்வளவுதான்  அர்த்தம்.

கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.

நாம் வாழ்கையை ஒரே கோணத்தில் சிந்திக்கிறோம்.

பிறப்பு , வளர்தல், மூப்பு, பின் இறப்பு....இந்த கோணத்தில் நாம்  பார்க்கிறோம். இறப்போடு  எல்லாம் முடிந்து விடுகிறது.

வசிட்டர் கொஞ்சம் வேறு விதமாக சொல்கிறார்.

"இறத்தலும் பிறத்தலும் இயற்கை " முதலில் இறப்பு, பின் பிறப்பு இதுதான் இயற்கை  என்கிறார்.

தசரதன் இறந்து போனான். "இதை முடிவு என்று நினைக்காதே , இறந்தது பிறக்கும் " என்று இராமனுக்கு அறிவுறுத்துகிறான்.

பிறந்தது இறக்கும் என்பது கண்  கூடு.

இறந்தது பிறக்குமா  என்பது தெரியாது. சந்தேகம்  இருக்கிறது அதில்.

பிறத்தலும் இறத்தலும் இயற்கை என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.

வாழ்கை ஒரு முடிவற்ற நதிபோல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதே போல் , இல்லறம் , அது முடிந்து துறவறம். அது தான் நாம் அறிந்த முறை.

வசிட்டன் அதையும் மாற்றிப் போடுகிறான்.

"துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது" முதலில் துறவறம் சொல்லி அப்புறம் நல்  அறம் அதாவது இல் அறம் (இல்லறம்) பற்றி கூறுகிறான்.

இது வசிட்டன் சொன்னான் என்றால் ஏதோ தனக்கு ஆறுதல் சொல்வதற்காக அப்படி சொல்கிறான் என்று   இராமன் நினைக்கலாம். நாமும் அப்படித்தான் நினைப்போம்.

எனவே வசிட்டன் சொல்கிறான் "மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ"


மறைகள் (வேதம் முதலியவை ) அப்படித்தான் சொல்கின்றன. நீ அதைப் படித்து இருகிறாய். மறந்து விட்டாயா என்று அவனுக்கு ஞாபகப் படுத்துகிறான்.

இராமன் ஏதோ மறைகளை கடமைக்கு படித்தவன் அல்லன். அவற்றின் எல்லைகளை   கண்டவன்.அவற்றின் முடிவை  அறிந்தவன். அவை சொல்வதின்  அர்த்தம் முழுதும் அறிந்தவன்.

தசரதன் இறந்தான் என்று வருந்தாதே, தசரதன் மீண்டும் பிறந்தான் என்று எண்ணிக் கொள். துக்கம் எங்கே வரும் ?

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே    
யொழுக்க முடையார்வாய்ச் சொல்


வாழ்வில் இழுக்கம் வரும்போது உயர்ந்தவர்களின் சொற்கள் வழுக்கும் நிலத்தில் ஊன்று கோல் போல உதவும் என்பது வள்ளுவம்.

வசிட்டனின் வார்த்தைகளை இன்னும் எடுத்துச் சொல்வேன்


1 comment:

  1. இன்னும் சொல்லுக.

    நன்றி.

    ReplyDelete