Saturday, December 21, 2013

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல் - 2

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல்  - 2



இந்திரசித்து இறந்து விட்டான். இலக்குவன் அவன் தலையை கொண்டு சென்று விட்டான். இராவண யுத்த களத்திற்கு வந்து தலையில்லாத மகனின் உடலை நாட்டுக்கு கொண்டு செல்கிறான்.

செய்தி கேட்டு மண்டோதரி ஓடி வருகிறாள்.

கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத பாடல் ஒன்று கம்பனிடம் இருந்து வருகிறது.

மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வருகிறாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுகிறது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்து  கிடக்கிறது. துக்கம் தாளாமல் அவள் கைகளால் தன் மார்பின் மேல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி அடித்ததால் திண்மையான முலைகளின் மேல் அடித்ததால் அவள் கைகள் சிவந்து போயின. அவள் மார்புகள் பெரியதாய் இருந்தன. அவள் இடையோ சிறுத்து இருந்தது.

பாடல்

கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி, அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, சற்றே
மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள்.

பொருள்


கருங் குழல் = கரிய  குழல்

கற்றைப் = அடர்த்தியான

பாரம் = பாரம் கொண்ட

கால் தொட = காலைத் தொட (அவ்வளவு நீளம்)

கமலப் பூவால் = சிவந்த கைகளால்

குரும்பையைப் = தேங்காய் முளை விடும் போது உள்ள நிலைக்கு குரும்பு என்று பெயர்

புடைக்கின்றாள்போல் = அடிப்பதைப் போல

கைகளால் முலைமேல் கொட்டி = கைகளால் முலையின் மேல் அடித்து

 அருங் கலச் சும்மை தாங்க = அருமையான அணிகலன்களைத் தாங்க

 'அகல் அல்குல் அன்றி = அகன்ற அல்குல் மட்டும் அல்ல ,

சற்றே  மருங்குலும் உண்டு உண்டு' என்ன = சிறிய இடையும் உண்டு

மயன் மகள்  = மயனின் மகள்

மறுகி வந்தாள் = மனம் கலங்கி வந்தாள்


இறந்து கிடக்கும் மகனைக் காண கதறிக் கொண்டு வரும் ஒரு தாயை வர்ணிக்கும்  இடமா இது ? கம்பன் இப்படிச் செய்யலாமா ?

அவலச் சுவை இருக்க வேண்டிய இடத்தில் சிருங்காரச் சுவை வரலாமா ?

இது பிழை இல்லையா ?

======================================================================

இந்திரசித்து ஏன் இறந்தான் ?

இராவணன் சீதையின் மேல் கொண்ட காதலால் விளைந்த சண்டையில் இறந்தான்.

இராவணன் ஏன் சீதையின் மேல் காதல் கொண்டான் ?

மண்டோதரி அழகாய் இருந்திருந்தால் ஒரு வேளை இராவணன் சீதையின் மேல்  காதல் கொண்டிருக்க மாட்டானோ என்று சந்தேகம் எழலாம்.

இல்லை.

மண்டோதரி பேரழகி.

கரு கரு என்ற கூந்தல். பாதம்  நீண்ட கூந்தல்.

இல்லை என்று சொல்லும்படி உள்ள இடுப்பு.

அழாகான உடல் அமைப்பு.

அவள் கைகள் சிவந்து  இருக்கின்றன.

ஏன் ?

அவள் மார்பில் அடித்துக் கொண்டு அழுததால்.

அவள் மார்புகள் அவ்வளவு இளமையாய் உறுதியாய் இருக்கிறது. அதில் அடித்துக் கொண்டு அழுததால் அவள் கைகள் சிவந்து போய் விட்டன.

அவள் அழகுக்கு ஒரு குறைவும் இல்லை.

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒரு சோகமான நிலையில் அவளைப் பார்க்கும் போது "ஐயோ பாவம்" என்று தான் தோன்றும்.

அந்த நிலையிலும் அவளின் அழகு தெரிய வேண்டும் என்றால் அவளின் அழகு   மிக பிரமிபுட்டுவதாக இருந்திருக்க வேண்டும்.

இறந்து கிடக்கும் மகனைக் காண வரும்போதும் கம்பனுக்கு அவளின் அழகு தான்  தெரிகிறது.

இராவணின் காதலுக்கு , மண்டோதரி அழகில்லாமல் இருந்ததல்ல காரணம்.

விதி என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல ?



2 comments:

  1. இந்த மாதிரி, சுற்றி வளைத்தாலும், விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete